ட்விட்டர் தளத்திலிருந்து விலகியிருந்த சித்தார்த், மீண்டும் தனது ட்விட்டர் கணக்கில் செயல்படத் தொடங்கியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு வரை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகத் தனது கருத்துகளைப் பகிர்ந்து வந்தவர் சித்தார்த். அரசியல் ரீதியிலான கருத்துகளையும் எவ்விதப் பயமுமின்றி பகிர்ந்து வந்தார். இந்தக் கருத்துகள் தொடர்பான எதிர்வினைகளுக்கும், உடனுக்குடன் பதிலடி கொடுத்தார்.
ஆனால், எந்தவித முன்னறிவிப்புமின்றி ட்விட்டர் தளத்திலிருந்து விலகினார் சித்தார்த். இவருடைய ட்விட்டர் பக்கத்தினைத் தேடியவர்கள், அவரது கணக்கு இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்கள். தொடர்ச்சியாக தனது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 30) மீண்டும் ட்விட்டர் பக்கம் திரும்பியுள்ளார் சித்தார்த். தனது பழைய கணக்கையே மீண்டும் புதுப்பித்துள்ளார்.
அதில் வெளியிட்டுள்ள ட்வீட்களில் சித்தார்த் கூறியிருப்பதாவது:
"அடுத்த வருடம் எனது நடிப்பில், தமிழில் புதிதாக நான்கு படங்கள் வெளியாகவுள்ளன. ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்த வருடம் கடினமானதாக இருக்கிறது. நாம் அனைவரும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி முன்னேறுவோம் என நம்புகிறேன். அதுவரை ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே. கூடிய விரைவில் சந்திப்போம்.
தற்போது ஆர்வத்தைத் தூண்டும், சர்வதேச படைப்பான எஸ்கேப் லைவ் (வெப் சீரிஸ்) படப்பிடிப்பில் இருக்கிறேன். என் அடுத்த சீரிஸ் இந்தியில். கோவிட்டுக்கு நன்றி. மிக நீண்ட இடைவெளி கொடுத்தது. அதற்குப் பின் தற்போது ஓய்வின்றிப் பணியாற்றி வருகிறேன்.
பாதுகாப்பாக இருக்கிறேன். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்."
இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ட்விட்டர் பக்கம் திரும்பினாலும், சித்தார்த் அரசியல் கருத்துகள் கூறுவாரா என்பது விரைவில் தெரியவரும்.