தமிழ் சினிமா

'சூரரைப் போற்று' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், விமானப்படை தரப்பிலிருந்து தடையில்லாச் சான்றிதழ் வருவது தாமதமானதால் இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தத் தகவல் வெளியான அடுத்த நாளே, 'சூரரைப் போற்று' வெளியீடு தாமதம் தொடர்பாக, தனது வருத்தத்தை அறிக்கையாக வெளியிட்டார் சூர்யா. அதனைத் தொடர்ந்து சில தினங்களில் படத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் கிடைத்தது.

இதனால், படத்தின் வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று (அக்டோபர் 26) படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அபிஷேக் பச்சன், மாதவன் எனப் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ட்ரெய்லரில் நவம்பர் 12-ம் தேதி 'சூரரைப் போற்று' திரைப்படம் வெளியாக இருப்பதை, அமேசான் ப்ரைம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. தீபாவளி வெளியீடாக வரவிருப்பதால் சூர்யாவின் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT