தமிழ் சினிமா

'பிதாமகன்' வெளியான நாள்: அசலான மனிதர்களை அடையாளம் காட்டிய படம் 

ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமா வரலாற்றில் அனைவராலும் உச்சிமுகர்ந்து பாராட்டப்பட்ட படங்களில் ஒன்றான 'பிதாமகன்' வெளியான நாள் இன்று (அக்டோபர் 24). 2003 தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் பிணம் எரிக்கும் தொழிலாளியை நாயகனாகக் கொண்டிருந்தது. சமூகத்தின் கீழ் நிலையில் புறக்கணிக்கப்பட்ட சூழலில் வாழும் மனிதர்களின் வாழ்வை உயிர்ப்புமிக்க ஆவணமாகத் திரையில் பதிவுசெய்த இந்தப் படம் மிகப் பெரிய வணிக வெற்றியையும் பெற்றது.

நட்சத்திர சங்கமம்

'சேது' படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் பாலா. அவருடைய இரண்டாம் படமான 'நந்தா' அவருடைய மதிப்பை மேலும் அதிகரித்தது என்றால் மூன்றாம் படமான 'பிதமாகன்' பாலாவை இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைப் படைப்பாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தியது.

பாலாவின் முதல் படம் நடிகர் விக்ரமுக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்தது. இரண்டாம் படம் சூர்யாவைத் தனித்துக் கவனிக்க வைத்தது. மூன்றாம் படம் அபாரத் திறமை, அசாத்திய உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றைக் கொண்டிருந்த இந்த இரு நடிகர்களையும் ஒரே படத்தில் இணைத்து நடிக்க வைத்தது. இந்தப் படம் வெளியாகும்போது இருவரும் நட்சத்திர அந்தஸ்தை அடைந்துவிட்டனர். அந்த வகையில் தமிழின் அரிதான மல்ட்டி ஸ்டாரர் படங்களில் ஒன்றாகவும் 'பிதாமகன்' அமைந்தது.

பேசத் தெரியாதவரும் பேசிக்கொண்டே இருப்பவரும்

படத்தில் விக்ரம் பிணம் எரிக்கும் தொழிலாளியான சித்தனாக நடித்திருந்தார். சுடுகாட்டிலேயே பிறந்து வளர்ந்து நாகரிகச் சமூகத்துடன் ஒன்றுபட முடியாத, பேசக்கூடத் தெரியாத மனிதராக அழுக்கு உடம்பும் பரட்டைத் தலையும் காரைப் பற்களுமாகத் தோற்றத்தில் அதிர வைத்தார். அதோடு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கோபம், ஆக்ரோஷம், பாசம், அழுகை என அனைத்து வகையான உணர்வுகளையும் வெளிப்படுத்தி அனைவரையும் அசரடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை விக்ரம் பெற்றபோது அவர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழகமும் பெருமைப்பட்டது. மிகப் பொருத்தமான தேர்வு என்று கொண்டாடியது.

அவருக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வேடம் சூர்யாவுக்கு. பேசிப் பேசியே அனைவரையும் ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவராக நடித்திருந்தார். விக்ரம் கதாபாத்திரத்துக்கு நேரதிராக பேசிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா முற்றிலும் வேறு விதமான நடிப்பில் ரசிகர்களைக் கவர்ந்தார். அதுவரை சற்று இறுக்கமான கதாபாத்திரங்களில் நடித்துவந்த சூர்யாவிடம் அபாரமான நகைச்சுவை நடிப்புத் திறன் இருப்பதை இந்தப் படத்தின் மூலம் கோலிவுட் கண்டுகொண்டது.

நடிப்பால் அசத்திய நடிகைகள்

அதுவரை கிளாமர் நடிகையாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த சங்கீதா, போதைப்பொருள் விற்கும் பெண்ணாக, சித்தன் மீது அளவுகடந்த அன்பு செலுத்துபவராக உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கி அனைவரையும் வியக்க வைத்தார். இந்தப் படத்தின் மூலம் அவருடைய இமேஜ் முற்றிலும் மாறியது. தொடர்ந்து பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்வதற்கு இந்தப் படம் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

'நந்தா'வில் அதிர்ந்து பேசாத இலங்கைத் தமிழ் அகதியாக நடித்திருந்த லைலா இந்தப் படத்தில் ஆர்ப்பாட்டமும் துறுதுறுப்பும் நிறைந்த பெண்ணாக சூர்யாவுடன் மோதும் காட்சிகளில் நகைச்சுவையிலும், பின்னர் இருவருக்குமிடையிலான காதல் காட்சிகளிலும் வெகு சிறப்பாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் வில்லனாக தமிழுக்கு அறிமுகமான மகாதேவன், கருணாஸ். மனோபாலா, லைலாவின அப்பாவாக நடித்தவர் முதற்கொண்டு சூர்யாவுடன் சிறையில் இருக்கும் போலிச் சாமியார் போல் ஒரு சில காட்சியில் வந்துபோகிறவர்கள் வரை அனைவரும் அந்த தேனி வட்டாரத்து மனிதர்களாகவே வாழ்ந்து அசத்தியிருந்தனர். ஒரே ஒரு பாடலுக்கு வந்து சென்ற சிம்ரனின் நடனமும் நடிப்பும் படத்துக்குக் கூடுதல் ஈர்ப்பை அளித்தது.

கலைக் கூட்டணியின் வெற்றி

பிணம் எரிப்பவர், கஞ்சா விற்பவர், சின்ன சின்ன மோசடிகளைச் செய்பவர் என சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரை மையக் கதாபாத்திரங்களாக வைத்து படமெடுத்தது பாலாவின் அபாரத் துணிச்சலின் வெளிப்பாடு. அவர்களுக்குள் இருக்கும் அன்பு, காதல், நையாண்டி சிரிப்பு, கோபம், அறவுணர்வு, அப்பாவித்தனம், ஏக்கம், துக்கம், அழுகை, என அனைத்தையும் ஒரு மாலையாகக் கோத்து திரையில் ஒரு உணர்வுபூர்வமான காவியத்தைப் படைத்திருந்தார் பாலா. இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும் பாலாவுக்கு வெகு சிறப்பாகத் துணை புரிந்தன.

'இளங்காத்து வீசுதே' என்னும் பாடல் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இளையராஜாவின் நெடிய திரையிசைப் பயணத்தில் 2000 ஆம் ஆண்டுக்குப் பின் அமைந்த முக்கியமான படங்களில் ஒன்றாக 'பிதாமகன்' அமைந்தது. சண்டைக் காட்சிகள் அனைத்தும் நாகரிகப் பசப்புகளை அறியாத முரட்டு மனிதன் எப்படி அடிப்பானோ அப்படியே இருக்கும்படியாக வெகு இயல்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இப்படி ஒரு கலைக் கூட்டணி இந்தப் படத்தின் வெற்றியைச் சாத்தியப்படுத்தியது.

சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள் சிலரின் பேராசையால் எளிய மனிதர்களின் வாழ்வு எப்படி எல்லாம் சிதைவுறுகிறது என்பதையும் யார் அசலான மனிதர்கள், யார் உண்மையிலேயே புறக்கணிக்கப்பட வேண்டிய கொடிய உயிரினங்கள் என்பதையும் பிரச்சார நெடி துளியும் இல்லாமல் அழுத்தமாகப் பதிவு செய்த படம் 'பிதாமகன்'.

இதுபோன்ற தீவிரமான விஷயங்களைப் பேசும் படங்கள் மெதுவாக நகர்பவையாகக் கேளிக்கை அம்சங்களே இல்லாதவையாக இருக்க வேண்டியதில்லை என்பதையும் உணர்த்திய படம். இப்படிப் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த படமான 'பிதாமகன்' காலத்தால் அழியாத புகழுடன் தலைமுறைகள் கடந்து ரசிகர்களில் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

SCROLL FOR NEXT