'குருதிப்புனல்' திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், படம் உருவான விதம் குறித்து படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பி.சி.ஸ்ரீராம் பேசியுள்ளார்.
கமல்ஹாசன், அர்ஜுன், நாசர், கவுதமி, கீதா, கே.விஸ்வநாத் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த திரைப்படம் 'குருதிப்புனல்'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம், இந்தியில் வெளியான 'த்ரோஹ்கால்' என்கிற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்.
முதன்முதலில் டால்பி ஒலித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய படம், பாடல்கள் இல்லாத படம், அந்த வருடம் இந்தியாவின் அதிகாரபூர்வ ஆஸ்கர் பரிந்துரை எனப் பல பெருமைகளைக் கொண்ட 'குருதிப்புனல்' திரைப்படம் எடுக்கும்போது, நமது அமைப்பின் மீது தனக்குப் பெரிய கோபம் இருந்ததாகவும், அதுதான் இந்தப் படத்தின் மீதான ஈர்ப்புக்குக் காரணம் என்றும் கூறுகிறார் பி.சி.ஸ்ரீராம்.
"படத்தின் முதல் காட்சியில் நாங்கள் பயன்படுத்தியிருந்த புகைப்படங்களைப் பார்த்தீர்களென்றால் தெரியும். தேசத்தில் நடந்த விஷயங்கள் மீது எங்களுக்கு அதிகக் கோபம் இருந்தது. எனது கோபம்தான் என் ஷாட்களில் பிரதிபலித்தது. கேமரா எப்போதுமே பாத்திரத்துக்கு நெருக்கமாகவே பயணிக்கும். அதன்பின் பெரிய கோட்பாடு எதுவுமில்லை. இப்படித்தான் கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்" என்கிறார் ஸ்ரீராம்.
இந்தி வடிவத்தின் இயக்குநர் கோவிந்த் நிஹ்லானி, கமல் மற்றும் ஸ்ரீராமை 'த்ரோஹ்கால்' திரையிடலுக்கு அழைத்தார். இந்தியில் ஓம் புரி மற்றும் நசிருதீன் ஷா ஆகியோர் நடித்திருந்தனர். படம் பார்த்ததும் தனக்குள் எழுந்த உணர்ச்சி குறித்து இன்று வரை விவரிக்க முடியவில்லை என்கிறார் ஸ்ரீராம். பார்த்து முடித்ததும், படத்தை தமிழில் ரீமேக் செய்வோம் என்று கமல் உடனடியாகச் சொல்ல, அதுவே சிறந்தது என்றாராம் ஸ்ரீராம்.
தமிழில் திரைக்கதை மற்றும் வசனத்தை கமல்ஹாசன் எழுதினார். துரோகி, குருதிப்புனல் ஆகிய தலைப்புகள் உத்தேசிக்கப்பட்டன. தெலுங்கில் 'துரோகி' என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால், சிலர் 'குருதிப்புனல்' என்கிற தலைப்பு வேண்டாம் என்றும், ரசிகர்களுக்கு இப்படியான கடுமையான தலைப்பு பிடிக்காமல் போகலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், ஸ்ரீராம் இந்தத் தலைப்பில் உறுதியாக இருந்தார். காரணம், இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஒரு நாவலின் பெயர் இது. மேலும் அகிரா குரோசவாவின் 'த்ரோன் ஆஃப் ப்ளட்' என்கிற தலைப்புக்கும் இதற்கும் ஒரு தொடர்பு இருந்ததுதான்.
மகேஷ் மகாதேவன்தான் 'குருதிப்புனல்' திரைப்படத்தின் இசையமைப்பாளர். குறைந்தபட்ச பின்னணி இசை கொண்ட இதில் டால்பி தொழில்நுட்பம் புதிய பரிமாணத்தைக் கொடுத்திருந்தது. அந்த ஒலி அனுபவத்துக்காகவே பலர் திரையரங்குக்கு வந்து படத்தைப் பார்த்ததாகக் கூறுகிறார் ஸ்ரீராம்.
"நாசர் முகம் திரையில் வரும்போதெல்லாம் மரணத்தின் அறிகுறியைப் போல, சங்கு ஊதுவது போல இருக்க வேண்டும் என்று மகேஷ் என்னிடம் சொன்னார். நாங்கள் சொன்ன கதையில் அவருடைய புரிதல் இது. அவர்தான் நாசர் வரும் காட்சிகளுக்கு இப்படிப் பின்னணி இசை வர வேண்டும் என்று யோசனை சொன்னவர்".
இன்றளவும் பிரபலமாக இருக்கும் திரைப்படத்தின் விசாரணைக் காட்சிகள் பற்றிப் பேசுகையில், "வழக்கமாக விசாரணை இப்படி நடக்காது. முதல் முறையாக அப்படி ஒரு காட்சி அமைப்பை யோசித்தேன். காட்சி சாதாரணமாக இருக்க வேண்டாம் என்று நினைத்தேன். மேலும் ரசிகர்களுக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கமும் இருந்தது".
வணிக ரீதியில் இருக்க வேண்டிய விஷயங்கள் குருதிப்புனலில் மிகக் குறைவு. பாடல்கள் கிடையாது. வன்முறை அதிகம். ஏ சான்றிதழ் பெற்ற படம். எனவே வெறும் 30 நாட்களில், கட்டுப்பாடான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இது. படப்பிடிப்புக்கு முன்னரே பெரும்பாலான விஷயங்கள் ஒழுங்காகத் திட்டமிடப்பட்டதால் இந்த வேகம் சாத்தியமாகியிருக்கிறது. தனக்கு இந்தப் படம் அதிகமான திருப்தியைத் தந்ததாகவும் கூறுகிறார் ஸ்ரீராம்.
'நாயகன்', 'அபூர்வ சகோதரர்கள்', 'தேவர் மகன்', 'சுப சங்கல்பம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசனும், பி.சி.ஸ்ரீராமும் இணைந்து பணிபுரிந்த கடைசித் திரைப்படம் 'குருதிப்புனல்'. இந்தியை விட தமிழில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குருதிப்புனலைப் பார்த்த அசல் வடிவத்தின் இயக்குநர் கோவிந்த் நிஹ்லானி, "அசலான ஒரு ரீமேக் படம்" என்று சொன்னதைத்தான் பி.சி.ஸ்ரீராம் பெரிய பாராட்டாகப் பார்க்கிறார்.
- ஸ்ரீவத்சன், தி இந்து (ஆங்கிலம்) | தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா