தமிழ் சினிமா

வேதாளம் - அஜித்தின் திருப்தியும் ஆர்வமும்

ஸ்கிரீனன்

ஜெமினி லேப்பில் நடைபெற்று வரும் 'வேதாளம்' படத்தின் இறுதிகட்டப் பணிகளைப் பார்வையிட்டார் அஜித்.

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிவா. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே, இப்படத்தின் மொத்த உரிமையையும் ஆளும் கட்சி தரப்பில் ஒருவர், பெரும் விலை கொடுத்து வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே இறுதி செய்யப்படாத எடிட்டிங்கில் படத்தைப் பார்த்த அஜித், படம் மிகவும் திருப்திகரமாக வந்திருப்பதாக இயக்குநர் சிவாவைப் பாராட்டி இருக்கிறார்.

தீபாவளி வெளியீடு என்பதால் ஜெமினி லேப்பில் DI பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனது படத்தின் பணிகள் நடைபெற்று வரும் ஜெமினி லேப்பிற்கு திடீரென சென்ற அஜித், பணிகள் எல்லாம் எந்தளவுக்கு இருக்கின்றன என்று கேட்டு அறிந்திருக்கிறார்.

ஜெமினி லேப்பிற்கு அஜித்தின் வருகை குறித்து இயக்குநர் சிவா, "இறுதிகட்டப் பணிகளைப் பார்க்க அஜித் வந்தார். அஜித் சாரும், நாங்களும் 24/7 தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அவருடைய வருகை எங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தின் சென்சார் பணிகள் இந்த வாரம் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்தே தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், பட வெளியீடு நவம்பர் 5-ம் தேதியா அல்லது 10-ம் தேதியா என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார். தயாரிப்பாளரின் அறிவிப்பிற்காக விநியோகஸ்தர் தரப்பும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

SCROLL FOR NEXT