தமிழ் சினிமா

ஃபைனான்சியரைத் திருமணம் செய்த ஆர்.கே.சுரேஷ்

செய்திப்பிரிவு

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனக்குத் திருமணமான செய்தியை உறுதி செய்துள்ளார்.

'தாரை தப்பட்டை', 'மருது', 'நம்ம வீட்டுப் பிள்ளை' ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ். 'தர்மதுரை' திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இவரே. மலையாளத்திலும் ஒருசில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை திவ்யா என்பவரை சுரேஷ் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால், சில காரணங்களால் அந்தத் திருமணம் நடைபெறவில்லை. தற்போது மது என்கிற ஃபைனான்சியரை சுரேஷ் திருமணம் செய்துள்ளார். ஒரு சில நெருங்கிய சொந்தங்கள் சூழ இந்தத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

"எனது மகிழ்ச்சியான தருணம் குறித்து உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. ஆம், எனக்குத் திருமணம் முடிந்துவிட்டது. உங்களது அன்பு, ஆசிர்வாதம், ஆதரவுக்கு நன்றி. என் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரிடமும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ட்விட்டரில் ஆர்.கே சுரேஷ் பகிர்ந்துள்ளார். இதோடு தாலி கட்டும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அடுத்ததாக 'ஜோசஃப்' என்கிற மலையாளத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அசலை இயக்கிய பத்மகுமாரே ரீமேக்கையும் இயக்குகிறார். இயக்குநர் பாலாவின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

SCROLL FOR NEXT