தமிழ் சினிமா

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நிரந்தரமாக மூடப்படுகிறதா? 

செய்திப்பிரிவு

திரைப்படங்களை சட்டவிரோதமாகப் பதிவேற்றிப் பகிர்ந்து வந்த முக்கிய இணையதளங்களில் ஒன்றான தமிழ் ராக்கர்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ் ராக்கர்ஸ் என்று பெயர் இருந்தாலும், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என அத்தனை மொழிகளிலும் வெளியாகும் புதிய படங்களை, வெளியான ஒரு சில மணி நேரத்தில் கள்ளத்தனமாகப் பதிவேற்றி பரப்பி வந்திருந்த இணையதளம் தமிழ் ராக்கர்ஸ்.

கரோனா நெருக்கடி காரணமாக ஊரடங்கு ஆரம்பித்த சமயத்திலிருந்து இந்திய மற்றும் சர்வதேச வெப் சீரிஸ்களையும் இந்த இணையதளத்தை நடத்துபவர்கள் விட்டுவைக்கவில்லை. அனைத்தும் இலவசமாகப் பதிவிறக்கக் கிடைப்பதால் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட தளங்களில், குறைந்த விலைக்கு வெளியாகும் திரைப்படங்களைக் கூட பலர் தமிழ் ராக்கர்ஸ் மூலம் பார்த்து வந்தனர்.

'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்', 'க.பெ.ரணசிங்கம்', 'வர்மா' என அனைத்து ஓடிடி வெளியீடுகளும், வெளியான வேகத்தில் தமிழ் ராக்கர்ஸிலும் கிடைக்க ஆரம்பித்தன. இதுகுறித்தே பல இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சங்கத் தலைவராக விஷால் தேர்வானபின், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தைக் கண்டிப்பாக முடக்குவேன் என்று உறுதி எடுத்தார். தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் போலவே செயல்படும் சில இணையதளங்களையும் முடக்கினார். ஆனால், தமிழ் ராக்கர்ஸுக்குப் பின்னால் செயல்படும் கூட்டத்தைப் பிடிப்பது மட்டும் எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.

திரையுலகத்தில் இருக்கும் சிலர் தான் தமிழ் ராக்கர்ஸ் நடத்துகின்றனர், இல்லை இல்லை வெளிநாடு வாழ் தமிழர்கள்தான் நடத்துகின்றனர், இல்லை இல்லை இது வேறொரு ரகசியக் கும்பல் என தமிழ் ராக்கர்ஸ் குறித்து அவ்வபோது கிசுகிசுக்களும் வந்து கொண்டேதான் இருந்தன.

இந்நிலையில், திங்கட்கிழமையன்று (அக்டோபர் 19) தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நிரந்தரமாக மூடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டது. இது வைரலாகி, பலரும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தை இயக்க முயன்று, அந்த இணைப்பு கிடைக்காமல் வந்த செய்தியை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பகிர ஆரம்பித்துள்ளனர்.

இதனால் நீண்ட காலமாக தமிழ் திரையுலகுக்குப் பெரிய எதிரியாக விளங்கி வந்த தமிழ் ராக்கர்ஸ் ஒழிந்தது என்று சிலர் பேசி வருகின்றனர். ஆனால், இப்போதெல்லாம் தமிழ் ராக்கர்ஸ் பக்கமே செல்வதில்லை. அனைத்துமே டெலிகிராமில் இலவசமாக பதிவிறக்கக் கிடைத்து விடுகிறது. இந்த நஷ்டத்தினால்தான் தமிழ் ராக்கர்ஸ் மூடப்பட்டுள்ளது என சிலர் நக்கலாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் ராக்கர்ஸ் மூடப்பட்டுவிட்டது என்கிற செய்தியை இன்னும் சிலர் உறுதிப்படுத்திய விதம்தான் மிகப்பெரிய நகை முரண். தமிழ் எம்வி என்கிற இணையதளத்தின் முகப்பில், 'பல வருடங்களாக உங்கள் அற்புதமான சேவைக்கு நன்றி தமிழ் ராக்கர்ஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணையதளமும் கள்ளத்தனமாகத் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தமிழ் ராக்கர்ஸ் தரப்பிலிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை என்பதால் எந்த நேரத்திலும் தளம் மீண்டும் செயல்படலாம் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT