தமிழ் சினிமா

'நிசப்தம்' படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?- ரசிகரின் கேள்விக்கு மாதவன் பதில்

செய்திப்பிரிவு

'நிசப்தம்' படம் அபத்தமாக இருந்ததாகக் கூறிய ரசிகருக்கு மாதவன் பதிலளித்துள்ளார்.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'நிசப்தம்'. கோனா வெங்கட் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியானது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் மிகவும் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை பல்வேறு வழிகளில் அமேசான் நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது. இதில் ஒரு அங்கமாக ட்விட்டர் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் மாதவன்.

அப்போது ரசிகர் ஒருவர், " 'நிசப்தம்' படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்? உங்களுக்குக் கதை பிடித்திருந்ததா அல்லது இப்படி ஒரு விஷயம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்ததா? படம் அபத்தமாக இருந்ததாக எங்களுக்குப் பட்டது. உங்களது பார்வையைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் செய்யும் தொழிலை விரும்பிச் செய்கிறீர்கள்" என்று மாதவனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக மாதவன், "சில சமயம் நாம் வெற்றி பெறுவோம், சில சமயம் தோற்போம். நான் வேறென்ன சொல்வது. நாங்கள் எங்களால் முயன்ற சிறந்த முயற்சியைத் தருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT