ஓடிடி தளங்களின் பெயர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் வேதனை தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருந்த பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டன. இதில் டிஸ்னி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் கூட விதிவிலக்கல்ல.
இந்தியாவிலும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை இருப்பதால் முன்னணி நடிகர்களின் பல படங்கள் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி ஓடிடி வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. இதனால் பல சிறிய பட்ஜெட் படங்கள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஓடிடி தளங்களின் பெயர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
''உங்கள் படங்களில் ‘ஹாட் ஸ்டார்ஸ்’ இல்லையெனில் அவற்றை ஓடிடி தளங்களுக்கு விற்பது எளிதல்ல. ஒரே வழி என்னவென்றால் அவற்றை ‘நெட்’ விலையை விடக் குறைவான விலையில் விற்பது அல்லது வருவாய் பங்கீடு அடிப்படையில் விற்பது. ‘அமேசிங்’காக இருக்கிறது இல்லையா? சிறிய நடிகர்களைக் கொண்டு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற ஒரு ‘ஜீ’ பூம்பா தேவைப்படுகிறது''.
இவ்வாறு தனஞ்ஜெயன் கூறியுள்ளார்.