திரையுலகில் அறிமுகமாகி நேற்றோடு 18 ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான ஒரு கடிதத்தை நடிகர் பிரசன்னா வெளியிட்டுள்ளார்.
சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படம் 2002 ஆம் ஆண்டு அக். 4 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில்தான் நடிகர் பிரசன்னா அறிமுகமானார். நேற்றுடன் பிரசன்னா திரையுலகுக்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வீடியோ ஒன்றைத் தயார் செய்து பிரபலங்கள் மூலம் பிரசன்னாவின் மனைவி சினேகா சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
பலரும் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து பிரசன்னாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதனால் நெகிழ்ந்துபோன பிரசன்னா தனது 18 ஆண்டுகால திரையுலகப் பயணம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''இது முழுக்க மென்மையான பயணமாக இருக்கவில்லை. இத்தனை ஆண்டுகளும் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருந்தது. எனக்கு ஒரு கனவு இருந்தது. நடிகனாக வேண்டும் என்ற கனவு. அந்தக் கனவே என்னைச் சினிமாவுக்குள் கொண்டு வந்து சேர்த்தது. பலமுறை நான் ஒரு வெளியாள் என்றே உணர்கிறேன். ஆனால், இங்குதான் என் மனம் உள்ளது. என்னால் முடியும் என்று நான் நம்புவதை இங்குதான் செய்யமுடிகிறது. நான் இங்குதான் இருப்பேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். கடைசி வரை இருப்பேன்.
2002 ஆம் ஆண்டு இதே நாளில் தான் என்னுடைய முதல் படமான ‘ஃபைவ் ஸ்டார்’ வெளியானது. கண்மூடி திறப்பதற்கும் ஓடிவிட்ட இந்த 18 ஆண்டுகளில் வாழ்க்கை ஏராளமான பாடங்களையும் கற்றுக் கொடுத்துள்ளது. சரியோ தவறோ, தோல்விகளே என்னை வலிமையாக்கியது.
வெற்றி என்பது நிரந்தரமல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். நண்பர்களைச் சம்பாதித்தேன். மன்னித்துக் கடந்து செல்லக் கற்றுக்கொண்டேன். மன்னிப்புக் கேட்கவும் கற்றுக்கொண்டேன்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள், ரசிகர்கள், சக நடிகர்கள், குடும்பம், என் மனைவி, ஊடகங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக கடவுள் என உங்கள் அனைவரின் முன்பும் கைகூப்பி நின்று கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதை அறிவேன். நான் இந்தப் பயணத்தைத் தொடங்கியபோது இருந்த கனவு இப்போதும் இருக்கிறது. எப்போதும் போல இல்லாமல் இப்போது என்னோடு உங்கள் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும் உள்ளன. வேறென்ன வேண்டும்? நன்றி என்பது மிகவும் குறைவான வார்த்தை. எனினும் உங்கள் அனைவருக்கும் நன்றி''.
இவ்வாறு பிரசன்னா கூறியுள்ளார்.