என்னை எப்போதும் கண்ணா என்றே அழைப்பார். கடைசி வரை வாசு என்று கூப்பிட்டதே இல்லை என இயக்குநர் பி.வாசு உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று (செப்டம்பர் 30) எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்துகொண்டு எஸ்பிபி பற்றிய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இதில் இயக்குநர் பி.வாசு கலந்துகொண்டு பேசியதாவது:
''எஸ்பிபி உலகையே அழவைத்துவிட்டு நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். நான் உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்தில் ‘ஒரே நாள் உனை நான்’ என்ற பாடல் பதிவின்போது அவரை முதன்முதலில் சந்தித்தேன். அன்று முதல் அவருடன் பேசிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னை எப்போதும் கண்ணா என்றே அழைப்பார். கடைசி வரை வாசு என்று கூப்பிட்டதே இல்லை.
சில தினங்களுக்கு முன்பு அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என நாம் அனைவரும் பிரார்த்தித்தோம். ஆனால், கடவுள் அவரைக் கைவிட்டு விட்டாரே என்று வருத்தப்பட்டோம். நாம் மட்டும் அவருக்கு ரசிகர்களல்ல. கடவுளே அவருக்கு ரசிகர்தான். எனவேதான் ‘சங்கரா’ என்று பாடிய பாலசுப்ரமணியத்தை தன் மடியில் அழைத்துக் கொண்டார்.
தயாரிப்பாளர்களும், இசையமைப்பாளர்களும், எஸ்பிபிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தீர்களானால் நீங்கள் சரணுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்''.
இவ்வாறு பி.வாசு பேசினார்.