தமிழ் சினிமா

எஸ்பிபி இல்லாத சோகம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது: கமல் உருக்கம்

செய்திப்பிரிவு

எஸ்பிபி இல்லாத சோகம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று (செப்டம்பர் 30) எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்துகொண்டு எஸ்பிபி பற்றிய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் கமல்ஹாசன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் பேசிய வீடியோ பதிவு திரையிடப்பட்டது.

அதில் அவர் பேசியதாவது:

''வகுப்பறையில் நமக்குப் பிடித்த மாணவர் என்று ஒருவர் இருப்பார். அவருடன் நாம் நட்பாகி பின்னர் அந்த நட்பு பல ஆண்டுகாலம் நம் வாழ்க்கையில் தொடரும். அப்படிப் பலர் எனக்கு இருக்கிறார்கள். ஆனால், இன்னும் சிலருடன் வெறும் ஹலோ மட்டும் சொல்லிவிட்டுத் தள்ளியிருந்தால் கூட சூழலும், நிகழ்வுகளும் அவர்களை ஒன்றாக இணைத்துவிடும். அப்படித்தான் முதலில் பாலு சார், பிறகு பாலு காரு ஆகி எனக்கு அண்ணய்யா ஆகிவிட்டார். நான் எங்கெல்லாம் சென்று வெற்றிபெற்றேனோ அங்கெல்லாம் அவரது குரல் எனக்குப் பக்கபலமாக இருந்திருக்கிறது. இன்னும் பல வடநாட்டு ஹீரோக்களுக்கு மார்க்கெட்டைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு குரலாகவே அது இருந்தது. மாபெரும் பாடகர்களாக இருந்தவர்கள் கூட இப்படியொரு சாதனையை நிகிழ்த்தியிருக்கவில்லை.

நான் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தபோது அவர் உருவத்திலேயே ஒரு சோர்வு தெரிந்தது. அவர் எப்போதும் அப்படி இருக்கவே மாட்டார். நான் சரணுக்கு ஆறுதல் கூறச் சென்றபோதே இந்த மாபெரும் காவியத்தின் கிளைமாக்ஸ் என்னவென்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது.

என்னை விட இளையவரான சரணுக்கு நான்தான் ஆறுதலாக இருக்கவேண்டும் என்று வந்த அழுகையையும் அடக்கிக் கொண்டேன். ஆனால், இப்போது நாளாக நாளாக இந்த சோகம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதைப் போல எங்கெளுக்கெல்லாம் இன்னும் பயனுள்ள ஒரு மகானாகத்தான் அவர் இருக்கிறார். புது வருடம் என்றாலே அவர் பாட்டுதான்.

என் பிறந்த நாளின்போது என்னுடன் இருக்கமுடியவில்லையென்றால் என்னை அழைத்துப் பேசுவார். நானும் கமலும் என்ற ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வந்தார். கடந்த ஆண்டு தேதி தள்ளிப் போனதால் அந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இதைக் கூறி என்னிடம் வருத்தப்பட்டார். நாங்கள் நினைத்துப் பார்க்காத ஒரு மரணம் இது. திரைப்பட நடிகர்களுக்கு மட்டுமல்லாது வெங்கடாஜலபத்திக்கும் கூட பின்னணி பாடியுள்ளார். அங்கே சென்றாலும் அவர் குரல்தான். கிறிஸ்தவ சபைகள், இஸ்லாத்துக்காகக் கூடப் பாடல்கள் பாடியுள்ளார். எப்படி எல்லா ஹீரோக்களையும் அவர் ஆதரித்தாரோ, அதேபோல எல்லா மதங்களையும் அவர் ஆதரித்தார்''.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

SCROLL FOR NEXT