நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் தங்களுடைய முதல் தமிழ்ப் படத்தை அறிவித்துள்ளது. இதில் 4 முன்னணி இயக்குநர்கள் கைகோத்துள்ளனர்.
பல்வேறு முன்னணி இயக்குநர்கள் ஒன்றிணைந்து ஒரே தலைப்பின் கீழ் ஆந்தாலஜி படத்தை உருவாக்குவது ட்ரெண்டாகிவிட்டது. நேற்று (செப்டம்பர் 30) அமேசான் ப்ரைம் நிறுவனம் 'புத்தம் புதுக் காலை' என்ற தலைப்பில் உருவாகியுள்ள ஆந்தாலஜி படத்தை அறிவித்தது. 5 கதைகள் கொண்ட இந்தப் படத்தை சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளனர்.
தற்போது நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தங்களது முதல் தமிழ்ப் படத் தயாரிப்பை அறிவித்துள்ளது. இதுவும் ஆந்தாலஜி பாணியில் உருவாகியுள்ள படமாகும். இதற்காக வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கைகோத்துள்ளனர்.
'பாவக் கதைகள்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி படம் காதல், அந்தஸ்து, கெளரவம் உள்ளிட்ட கருவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆர்.எஸ்.வி.பி மூவிஸ் நிறுவனம் மற்றும் ப்ளையிங் யூனிகார் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் 'பாவக் கதைகள்' எப்போது வெளியாகும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.