தமிழ் சினிமா

நண்பன் எஸ்பிபி இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை: இயக்குநர் பாரதிராஜா உருக்கம்

செய்திப்பிரிவு

என் நண்பன் எஸ்பிபி என்னோடு இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார்.

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்று (செப்டம்பர் 30) எஸ்பிபி-யின் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்து கொண்டு எஸ்பிபி பற்றி தங்களுடைய நினைவஞ்சலியைப் பகிர்ந்து வருகிறார்கள். இயக்குநர் பாரதிராஜா இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் பேசிய வீடியோ பதிவு திரையிடப்பட்டது. அதில் அவர் பேசியதாவது:

"கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ராகதேவனாக இசை மேதையாக நமக்கெல்லாம் உயிர் மூச்சாக இருந்த என் நண்பன் எஸ்பிபி. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. சில சோகங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது.

50 ஆண்டுக்கும் மேலாக என் நண்பன். அவன் இசைக் கலைஞன் மட்டுமல்ல, நல்ல மனிதன். பண்பும், பாசமும் நேசமும் கொண்ட ஒரு மனிதன். சின்னப் பிள்ளைகளைக் கூட மரியாதையாகக் கூப்பிடுவான். ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்கு கிடையாது. என் நண்பன் எஸ்பிபி என்னோடு இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

கோடிக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்தோம். ஆனாலும், காலதேவன் நீங்கள் மட்டும் ரசித்திருக்கிறீர்கள் எஸ்பிபியை, தேவதூதர்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக அழைத்துக் கொண்டானோ என்று நான் நினைக்கிறேன். இந்த இழப்புக்கு ஈடு சொல்லவே முடியாது. அவருடைய குடும்பத்தினருக்கு எந்த விதத்தில் ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை.

எஸ்பிபி பெயரைக் காப்பாற்ற அவரைப் போல் நல்லவராக இருந்தால் போதும். அது நாம் எஸ்பிபிக்கு செய்ய வேண்டிய ஒரு கடமை. நல்ல பிள்ளைகளை, ரசிகர்களை வளர்த்து விட்டிருக்கிறார் எஸ்பிபி, நல்ல நண்பர்களை வைத்திருந்தான் எஸ்பிபி. உதாரணமாக ஒருவன் வாழவேண்டும் என்றால் எஸ்பிபியைப் போல் வாழ வேண்டும்"

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

SCROLL FOR NEXT