அன்பும், மன்னிப்பும் மட்டுமே எஸ்பிபி என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று (செப்டம்பர் 30) எஸ்பிபி-யின் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்து கொண்டு எஸ்பிபி பற்றி தங்களுடைய நினைவஞ்சலியைப் பகிர்ந்து வருகிறார்கள். அதில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:
"எஸ்பிபி சாரை ரொம்ப பெர்சனலாக தெரியாது. என் படங்களுக்கு 2 பாடல்கள் பாடியிருக்கிறார். அந்தளவுக்குத் தான் தெரியும். ஆனால், எஸ்பிபி சார் வந்து தென்னிந்தியாவின் 4 தலைமுறைகளுக்குக் குரலாக மட்டுமின்றி எல்லாமாக இருந்திருக்கிறார். அநிச்சயாக செய்யக்கூடிய செயல்கள் போல, அவருடைய குரல் இசையும் நம்மோடு கவனிக்காமலேயே இருந்திருக்கிறது.
கடந்த 2 மாதமாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் உன்னிப்பாகக் கவனிக்கும் போது அவர் எவ்வளவு இருக்கிறது என்பது தெரிகிறது. எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருப்பது என்னவென்றால், இந்த டிஜிட்டல் உலகத்தில் அவர் இல்லையென்றால், தொடர்ச்சியாக அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பது போல் தான் இருக்கிறது. எஸ்பிபி இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததிலிருந்து அவருடைய பாடல்கள், பேச்சுகள் எனப் பார்க்கிறோம்.
எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது எந்தவொரு தயக்கம் இல்லாமல் பாராட்டு மனது. அவரது ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போது எவ்வளவு நேர்மறையாக இருந்துள்ளார் என்பது தெரிகிறது. எஸ்பிபி சார் ஏதோ ஒரு வழியில் நம்முடன் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார். எஸ்பிபி அவர்களிடமிருந்து நாம் நேர்மறை எண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
நாம் எளிமையாக இருக்கப் பயிற்சி எடுக்கிறோம். அவர் இயல்பிலேயே அப்படித்தான் இருந்திருக்கிறார். அவர் போல் அன்பையும், பாராட்டையும் வேறு யாரும் கொடுக்க முடியாது என நினைக்கிறேன். அன்பும், மன்னிப்பும் மட்டுமே தான் எஸ்பிபி என நினைக்கிறேன். அது தான் அவருடைய கலையாகவும் இருந்திருக்கிறது என நினைக்கிறேன். எஸ்பிபியின் ஆளுமை மற்றும் குரல் நம்மைக் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது"
இவ்வாறு இயக்குநர் வெற்றிமாறன் பேசினார்