எஸ்பிபிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ்பிபிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவிலிருந்த தீபக் சுப்பிரமணியன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் "சகாப்தத்துடன் 52 நாட்கள்" என்ற தலைப்பில் 2 பக்கக் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
மிகவும் உருக்கமான அந்தக் கடிதத்தின் தமிழாக்கம்:
"மருத்துவமனையில் தினமும் காலை எனது அணியுடன் முன்னிரவு ஏதாவது முக்கியமான விஷயங்கள் நடந்துள்ளதா என்று கேட்டறிவேன். ஒரு முறை நோயாளிகளைப் பார்த்துவிட்டு வருவேன். அதன்பின் அறுவை சிகிச்சை செய்யச் சென்றுவிடுவேன். இதுவே என் தினசரி வழக்கம். ஆனால் கடந்த 52 நாட்கள் மிக வித்தியாசமாக இருந்தன.
தினமும் 4-5 மணி நேரங்களை என் இதயத்துக்கு நெருக்கமான ஒருவருடன் செலவிட்டேன்.
நான் மருத்துவராகப் படித்துக் கொண்டிருக்கும்போது பல நாள் இரவு அவரது குரலைக் கேட்டுக் கழிந்தது நினைவில் இருக்கிறது. நான் தூங்கப்போகும் வரை அவர் பாடல் தொடர்ந்து ஒலிக்கும். என்ன மனநிலையில் இருந்தாலும் அவரது குரலைக் கேட்டால் நிம்மதியாகத் தூக்கம் வரும்.
ஜூலை மாத இறுதியில் சரணுடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பணி நிமித்தமாக ஹைதராபாத் செல்லவிருக்கிறார் என்று சொன்னார். இப்போதைய சூழலை மனதில்கொண்டு நான் கவலைப்பட்டேன்.
ஆகஸ்ட் 3-ம் தேதி எஸ்பிபி, தனக்குக் காய்ச்சல் இருப்பதாக என்னை அழைத்துச் சொன்னார். கோவிட் பரிசோதனை செய்தபோது துரதிர்ஷ்டவசமாக அவருக்குத் தொற்று இருப்பது தெரியவந்தது.
அவரது வயதை மனதில் வைத்து, அபாயம் அதிகம் என்ற பிரிவில் ஆகஸ்ட் 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை தந்தோம் என்பது பற்றி நான் இங்கு கூற விரும்பவில்லை. இந்த இரண்டு மாதங்கள் அவருக்குச் சிகிச்சை அளித்தபோது என் உணர்வுகளை நான் இங்கு பகிர விரும்புகிறேன்.
கடந்த 5 வருடங்களாக எனக்கு எஸ்பிபியைத் தெரியும். தன்னை ஒரு விஐபி போல நடத்த வேண்டும் என்று அவர் ஒருமுறைகூட கேட்டதோ, அப்படி நடந்துகொண்டதோ இல்லை. பெரிய கூட்டம் அவரைச் சுற்றி இருக்கும். அவருக்குச் சிக்கல் வேண்டாம் என்பதால் அவர் எப்போது என்னைச் சந்திக்க வேண்டும் என்று அழைத்தாலும், என் உதவியாளரை வைத்து, அவரை எந்தத் தொந்தரவுமின்றி என் அறைக்கு அழைத்து வரச் சொல்வேன். ஆனால் என்றுமே, ''டாக்டர், என்னை மற்ற நோயாளிகளைப் போல நடத்துங்கள். எனக்கு விசேஷமாக எதுவும் வேண்டாம்'' என்பார்.
எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை துறையைத் தொடங்கிவைக்க நினைத்தபோது, எஸ்பிபியைத் தவிர வேறு யாரையும் சிறப்பு விருந்தினராக அழைக்க எனக்குத் தோன்றவில்லை. பத்திரிகையில் அவரது பெயருக்குப் பின்னால் பத்மஸ்ரீ சேர்த்தபோது, அவர் என்னை அதற்காகவே அழைத்து, ''எதற்கு தீபக்? எஸ்பிபி மட்டும் போதும்'' என்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு இந்தக் கனிவான மென்மையான மனிதருக்கு அதிக பிராண வாயு தேவைப்பட்டபோது அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற வேண்டியிருந்தது. அதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்பது தெரியாமல் நான் கவலையிலிருந்தேன். ஆனால், அவர் எந்தத் தயக்கமுமின்றி, "தீபக், எது அவசியமோ அதைச் செய்யுங்கள்" என்றார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியபோது, அவர் மூச்சுக் குழலுக்குக் குழாய் செலுத்தும் வரை எனக்குப் பல முறை வீடியோ அழைப்புகளைச் செய்தார்.
குழாய் செலுத்துவதற்குமுன், டாக்டர் சபாநாயகம் மற்றும் டாக்டர் நந்த கிஷோர் ஆகியோர் பிராணவாயு குறைபாட்டைச் சரிசெய்ய என்ன செய்யப் போகிறோம் என்பதைச் சொன்னவுடன், தான் சிறந்த மருத்துவர்களின் கைகளில் இருப்பதாகவும், எது தேவையோ அதை அவர்கள் செய்ய வேண்டும் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.
அவருக்கு நினைவு திரும்பிய பிறகு, அவருக்காக நாங்கள் உருவாக்கிய விசேஷ தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் எழுத ஆரம்பித்தார். மருத்துவமனை ஊழியர்களுக்கு எழுத ஆரம்பிக்கும் முன், ஒவ்வொரு முறையும், "உங்கள் அனைவருக்கும் என் மரியாதையுடன்" என்றே ஆரம்பிப்பார்.
சிகிச்சையின்போது அத்தனை மருத்துவர்கள், ஊழியர்களை அவ்வளவு மரியாதையுடன் நடத்தினார். அதற்காக எப்போதுமே அவரை வணங்குவோம். முழுமையாக ஒத்துழைத்து, சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் மறைவுக்கு இரண்டு நாட்கள் முன்பு வரைகூட. அதுவரை அவரை தினமும் 20 நிமிடங்கள் எழுப்பி உட்காரவைப்போம்.
சிகிச்சைக்குப் பின் அவர் குணமடைந்ததைப் பார்ப்பது அலாதியாக இருந்தது. ஆனால், கடைசி 48 மணி நேரத்தில் திடீரென எல்லாம் தலைகீழாகிப் போனது. இது எந்தவித மருத்துவ சிகிச்சைக்கும் அப்பாற்பட்ட வேகம். பல வதந்திகளுக்கு மத்தியில், இந்த 52 நாட்கள் என் வாழ்க்கையில் நான் பொக்கிஷமாக நினைப்பவை. எஸ்பிபியுடன் நேரம் செலவிட்டது நான் சில விஷயங்களை உணர எனக்கு உதவியது.
1. அவரைப் பார்த்துக்கொள்ள என்னைத் தேர்ந்தெடுத்தது என்றுமே என் மகுடத்தில் ஒரு முத்தாக இருக்கும். எதுவும் அதை மாற்றாது. என்னால் முடிந்தவரை அவருடன் நேரம் செலவிட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
2 . அவரைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்கள் குழுவை அவர் இன்னும் நெருக்கமாக்கினார். நான், டாக்டர் சபாநாயகம், டாக்டர் நந்த கிஷோர், டாக்டர் சுரேஷ் ராவ், டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர்தான் இந்தக் குழு. இந்தக் காலகட்டத்தில் நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களானோம். எங்கள் தினசரி சந்திப்புகள் இப்போது இல்லையே என்று நான் நினைக்கிறேன்.
3 . எஸ்பிபியின் மகன் சரண் உண்மையில் எனக்கொரு சகோதரரைப் போல மாறிவிட்டார். தினசரி தொலைப்பேசி அழைப்புகள், என்ன நிலை என்று சொல்லுவது, ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்ட தருணங்கள் எல்லாம் எங்களை நெருக்கமாக்கியது. சரண், அவரது தாய் மற்றும் குடும்பத்தினரின் அழைப்புக்கு என்றுமே தயாராக இருப்பேன்.
4. மிக முக்கியமாக, ஒரு மனிதர் உள்ளிருந்து எப்படி அடக்கத்துடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும் என்பதை எஸ்பிபி எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர் போற்றுதலுக்குரிய போராளி. கடைசி வரை முழு வலிமையுடன் போராடினார். அவர் ஒரு அற்புத மனிதர். உண்மையான சகாப்தம். அவரது குரல், பாடல்கள் மூலம் என்றும் எல்லோருக்காகவும் நீடித்து வாழ்வார்.
- டாக்டர் தீபக் சுப்பிரமணியன், எஸ்பிபியின் மருத்துவர், அவரது மிகப்பெரிய ரசிகன்.