தமிழ் சினிமா

இயக்குநர்கள் இசை ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்: ஏ.ஆர். ரஹ்மான்

செய்திப்பிரிவு

இயக்குநர்களும் இசை ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து பிரபலங்கள் அனைவருமே ஜூம் செயலி, நேரலைப் பேட்டி என இறங்கினார்கள். மேலும், சில பிரபலங்கள் தனியாக யூடியூப் சேனல் தொடங்கியுள்ளனர்.

பிரபல பாடகியான சுதா ரகுநாதன் யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார். இவருடைய யூடியூப் சேனலுக்கு பல்வேறு முக்கியப் பிரபலங்கள் பேட்டியளித்துள்ளனர். தற்போது அந்தப் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளார்.

அந்தப் பேட்டியில் திரைப்படங்களில் பாடல்களில் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பற்றிய கேள்விக்கு ஏ.ஆர். ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''இசை என்பது தண்ணீர் போல. அது காலத்துக்கு ஏற்பத் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும். திரைப்படங்களைப் பொறுத்தவரை அவற்றின் கதைக்களம் மாற்றமடைந்து விட்டதால் பாடல்கள் குறைந்துவிட்டன.

உலகமும் மாறிக் கொண்டிருந்தது. இயக்குநர்களும் இசை ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களால் இசைக்கான சிறந்த திரைப்படங்களை உருவாக்க முடியும்.

அதே நேரம் அதிக நுணுக்கங்களும் பார்வையாளர்களைப் போரடித்துவிடும். கடந்த ஆறேழு வருடங்களாக இசை குறித்த ஆய்வை மேற்கொண்டு, என் தயாரிப்பில் வரும் முதல் திரைப்படமான '99' சாங்ஸ் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறேன். அது வெளியான பிறகே ஆர்வத்துடன் அடுத்தடுத்த விஷயங்களைச் செய்ய இயலும்''.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT