தமிழ் சினிமாவில் மிகத் திறமையான நடிகர்களில் ஒருவரும் மிகச் சிறந்த படங்களில் நடித்து ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவருமான தினேஷ் நேற்று (செப்டம்பர் 27) தன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.
சென்னைவாசியான தினேஷ் முதலில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். அதன் பிறகு 'எவனோ ஒருவன்', 'ஆடுகளம்', 'மெளனகுரு' உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். 2012இல் வெளியாகி விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்ற 'அட்டகத்தி' படத்தின் மூலம் நாயகனாகப் பரிணமித்தார் தினேஷ். பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் அடிக்கடி காதல் வயப்படுபவராகவும் காதல் தோல்வியைச் சாதாரணமாகக் கடந்து செல்பவருமான சென்னை புறநகர் வாழ் இளைஞனாக மிகச் சிறப்பாகவும் உயிரோட்டத்துடனும் நடித்திருந்தார் தினேஷ். படத்தின் வெற்றிக்கு தினேஷின் நடிப்பு முக்கியப் பங்களித்தது.
அடுத்ததாக ராஜு முருகன் இயக்கிய 'குக்கூ' திரைப்படத்தில் பார்வையற்ற இளைஞராக வெகு சிறப்பாக நடித்திருந்தார் தினேஷ். அந்தப் படமும் வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. 'திருடன் போலீஸ்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' போன்ற ஜனரஞ்சகமான படங்களில் நடித்து தன் நாயக அந்தஸ்தை வலுப்படுத்திக்கொண்டார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற 'விசாரணை' படத்தில் நாயகனாக நடித்தார் தினேஷ். தேசிய விருதையும் ஆஸ்கருக்குப் பரிந்துரையையும் பெற்ற இந்தப் படத்தில் காவல்துறை வன்முறைக்குப் பலியாகும் அப்பாவி இளைஞனாகவே வாழ்ந்திருந்தார் தினேஷ். இந்தப் படம் அவருடைய திரைவாழ்வில் உச்சமாக அமைந்தது. அதே ஆண்டு வெளியான 'ஒருநாள் கூத்து' படத்தில் ஐடி இளைஞனாக முதல் முறையாக தாடி-மீசை இல்லாத நவீன இளைஞன் தோற்றத்தில் நடித்தார். அதிலும் அவருடைய தோற்றப் பொருத்தமும் கதையையும் கதாபாத்திரத்தையும் உள்வாங்கி வெளிப்படுத்திய விதமும் சிறப்பாக இருந்தன. விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட இந்தப் படமும் வணிக வெற்றியையும் பெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நாயகனாக வைத்து ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரமாகக் கவனம் ஈர்த்தார். துடுக்குத்தனமாகவும் துணிச்சலுடனும் கபாலிக்காக எதையும் விசுவாசத்துடனும் வாழும் இளைஞனாக அதிக வசனம் பேசாமல் உடல் மொழியாலேயே கதாபாத்திரத்தின் தன்மையை ரசிகர்களை உணரச் செய்து ரசிக்க வைத்தார்.
'கபாலி'க்குப் பிறகு 'உள்குத்து', 'அண்ணனுக்கு ஜே', 'களவாணி மாப்பிள்ளை' போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதில் 'அண்ணனுக்கு ஜே' படத்தில் தினேஷின் நகைச்சுவைத் திறமை சிறப்பாக வெளிப்பட்டது. இயக்குநர் ரஞ்சித்தின் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கிய 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' திரைப்படத்தில் லாரி ஓட்டுநராக அவர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்துக்கும் உயிர் கொடுத்திருந்தார். இந்தப் படமும் குறிப்பாக தினேஷின் நடிப்பும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
தற்போது 'பல்லு படாம பாதுக்க', 'நானும் சிங்கிள்தான்' ஆகிய படங்களில் நடித்துவருகிறார் தினேஷ்.
நடிக்க வந்து எட்டு ஆண்டுகளுக்குள் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களிலும் தரமான வெகுஜனத் திரைப்படங்களிலும் நடித்திருப்பதோடு அனைத்து வகையான படங்களிலும் சிறப்பாக நடிப்பவர் என்ற நற்பெயரும் பெற்றிருக்கிறார் தினேஷ். இதைத் தக்கவைத்துப் பல தரமான படங்களில் நடித்துப் பல விருதுகளை வென்று நடிகராக மிகப் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று தினேஷை மனதார வாழ்த்துவோம்.