தமிழ் சினிமா

வெற்றிகளால் மகிழ்ச்சியா? அழுத்தமா?- ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

செய்திப்பிரிவு

வெற்றிகள் மகிழ்ச்சியைத் தருகின்றனவா, அழுத்தத்தைத் தருகின்றனவா என்ற கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்துள்ளார்.

இந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி என இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்துமே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

டேனி பாயல் இயக்கத்தில் வெளியான 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் மேடையில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று அடக்கமாகக் கூறிவிட்டு இறங்கிவிட்டார். பல்வேறு விருதுகள் வென்றிருந்தாலும் எதையுமே இவர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பது ஏ.ஆர்.ரஹ்மான் அளிக்கும் பேட்டிகளிலிருந்து தெரியும்.

தற்போது சுதா ரகுநாதன் யூடியூப் சேனலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி அளித்துள்ளார். அதில் "உங்கள் வெற்றிகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றனவா அல்லது அழுத்தத்தைத் தருகின்றனவா? அல்லது அவற்றிலிருந்து துண்டித்துக்கொள்ள விரும்புகிறீர்களா?" என்ற கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது:

"என்னை நானே அவற்றிலிருந்து துண்டித்துக் கொள்கிறேன். ஏனெனில் இப்போது யாருக்கு என்ன நடக்கும் என்றே சொல்ல முடியவில்லை. நாம் எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம், எவ்வளவு கவனமுடன் இருக்கிறோம், எப்படி அடுத்தவர்களை நடத்துகிறோம் போன்றவை எல்லாம் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றன.

உங்களுக்கு இந்தக் கதை ஞாபகம் இருக்கலாம். இளைஞர் ஒருவர் தன் தந்தைக்கு ஒரு தேங்காய் மூடியில் உணவு கொடுப்பார். அதைக் கவனிக்கும் அந்த இளைஞரின் மகன் அவரிடம் ‘அப்பா, அதை ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்’ என்று கூறுவான். ஏன் என்று கேட்பார் அந்த இளைஞர். அதற்கு அந்தச் சிறுவன் ‘ஏனெனில் உங்களுக்கு வயதானதும் நானும் அதில்தான் உங்களுக்கு உணவு கொடுப்பேன்’ என்று பதிலளிப்பான்.

இந்தக் கதை ஒரு மிகச்சிறந்த பாடம். ஏனெனில் நாம் உயரத்தில் இருக்கும்போது அடுத்தவர்களை எப்படி நடத்துகிறோமோ அதேபோல்தான் நம்மையும் அவர்கள் நடத்துவார்கள். அது மக்களோ, குடும்பமோ யாராக இருந்தாலும் சரி. எனவே, இந்த உயரம் எல்லாம் தற்காலிகமே. ஆனால் அதற்கான பொறுப்பை உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும்".

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT