தனது தாயார் கரீமா குறித்த பல்வேறு விஷயங்களை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து பிரபலங்கள் அனைவருமே ஜூம் செயலி, நேரலைப் பேட்டி என இறங்கினார்கள். மேலும், சில பிரபலங்கள் தனியாக யூடியூப் சேனல் தொடங்கியுள்ளனர்.
பிரபல பாடகியான சுதா ரகுநாதனும் யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார். அவரது யூடியூப் சேனலுக்கு பல்வேறு முக்கியப் பிரபலங்கள் பேட்டியளித்துள்ளனர். தற்போது அந்தப் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவருடைய தாயார் கரீமா பேகம் குறித்து சுதா ரகுநாதன் கேட்டார். உடனே ஏ.ஆர்.ரஹ்மான் அவர் பட்ட கஷ்டங்கள், தனக்கு செய்த உதவிகள் குறித்துப் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"என் அம்மாதான் எனக்கு சூப்பர் ஸ்டார். அவர் கஷ்டப்படுவதைப் பார்த்துள்ளேன். நாம் எடுக்கத் தயங்கும் பல அற்புதமான முடிவுகளை அவர் எடுப்பதைப் பார்த்துள்ளேன். அவர் மிகவும் துணிச்சலானவர். மனதில் ஆன்மிக வழிகாட்டுதலுடன் நுண்ணறிவோடு செயல்படக்கூடியவர். கடந்த ஆறேழு வருடங்களாக அவர் படுக்கையில் இருக்கிறார்.
என் அம்மாவுக்கு மூன்று பெண்கள். நான் ஒரே மகன். இப்போதும் பல பெரிய முடிவுகளை எடுப்பதற்கு அம்மாவின் வழிகாட்டுதல்களே எனக்கு உதவுகின்றன. முக்கியமாக யாருடனும் கூட்டு சேராதே என்று கூறுவார். நான் முதன்முதலில் ஸ்டுடியோ ஆரம்பித்தபோது ஒருவர் என்னிடம் நான் இசைக்கருவிகள் வாங்குகிறேன். நீங்கள் ஸ்டுடியோ ஆரம்பியுங்கள் என்று கூறினார். அப்போது என்னிடம் இசைக்கருவிகள் வாங்குவதற்குப் பணமில்லை.
அப்போது என் அம்மா, உனக்கு வேலை இல்லாமல் சும்மா இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், யாரோடும் கூட்டு சேராதே என்று கூறினார். அவர் ஏன் அப்படிக் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால், அது ஒரு மிகச்சிறந்த முடிவு என்று பின்னாளில் தோன்றியது.
மேலும், உன்னிடம் இரண்டு ரூபாய் இருந்தால் அதில் ஒரு ரூபாயை மட்டுமே செலவு செய்ய வேண்டும். நான்கு ரூபாய் செலவு செய்யக்கூடாது என்று கூறுவார். அப்போது ஏதாவது தவறு நடந்தால் நம்மால் அவற்றைச் சமாளிக்க முடியும். இதுபோன்ற விஷயங்கள்தான் என்னைப் பெரிய அழிவுகளிலிருந்து காப்பாற்றியது என்று சொல்லலாம்".
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.