திருவண்ணாமலையில் எஸ்பிபிக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றியுள்ளார்.
எஸ்பிபியின் நெருங்கிய நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா. இருவரும் இணைந்து பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர். எஸ்பிபிக்கு உடல்நிலை மோசமடைந்தபோது, 'பாலு சீக்கிரம் எழுந்து வா' என்று உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் இளையராஜா.
இளையராஜா - எஸ்பிபி இருவரும் எந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதை அந்த வீடியோ உணர்த்தியது. எஸ்பிபி மறைவை முன்னிட்டு இளையராஜா மிக உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், "பாலு, சீக்கிரம் எழுந்து வா.. உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். கேட்கல. நீ கேட்கல. போயிட்ட. எங்க போன? கந்தவர்களுக்காகப் பாடுவதற்காகப் போயிட்டியா? இங்க உலகம் ஒரே சூனியமாகப் போய்டுச்சு" என்று பேசியிருந்தார் இளையராஜா.
இன்று (செப்டம்பர் 26) காலை எஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது எஸ்பிபியின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றியுள்ளார் இளையராஜா. இதன் புகைப்படம் இளையராஜாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இளையராஜா - எஸ்பிபி நட்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் சமயத்தில், இளையராஜாவின் இந்தச் செயல் அவர்களுடைய நட்பு எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணர முடிகிறது.