தமிழ் சினிமா

எஸ்பிபி மறைவுக்கு சச்சின், அனில் கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா இரங்கல்

செய்திப்பிரிவு

எஸ்பிபி மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இரங்கல்கள் குவிந்தன.

இன்று (செப்டம்பர் 26) எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

எஸ்பிபியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்: எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் இசையைக் கேட்பது என்றுமே எனக்குப் பிடித்தமான விஷயம். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறேன். 'சாகர்' திரைப்படத்தில் அவர் பாடிய 'சச் மேரே யார் ஹாய்' எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இன்றுவரை நான் கேட்டு வருகிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் அனுதாபங்கள், ஆறுதல்கள்.

அனில் கும்ப்ளே: எஸ்பிபி இறந்துவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டு உடைந்துவிட்டேன். இந்திய சினிமாவில் ஒரு சகாப்தம். அவரது பாடல்கள் என்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கும். அவரது நட்பு, கிரிக்கெட் ஆட்டத்தின் மீது அவருக்கிருந்த அன்பு, எங்கள் சென்னை சந்திப்புகள் என்றும் நினைவில் இருக்கும். சுதாகர், சைலஜா, சரண் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபங்கள்.

சுரேஷ் ரெய்னா: சாதனைப் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவால் வருத்தத்தில் உள்ளேன். உங்கள் குரல் பல தலைமுறைகளுக்கு ஊக்கம் தரும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என் அனுதாபங்கள். ஓம் ஷாந்தி.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT