இதயத்தில் துளை விழுந்ததைப் போல் உணர்கிறேன் என்று எஸ்பிபி மறைவு குறித்து சூர்யா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இரங்கல்கள் குவிந்தன.
இன்று (செப்டம்பர் 26) எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
எஸ்பிபி மறைவுக்கு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என் இதயத்தில் ஒரு துளை விழுந்ததைப் போல உணர்கிறேன். ஒரு வாழ்நாளின் மகிழ்ச்சியான தருணங்களை இழந்ததைப் போல இருக்கிறது. எஸ்பிபி சார், நீங்கள் சாகாவரம் பெற்றவர். உங்கள் சாதனைகளுக்கு ஈடே கிடையாது. பணிவு என்றால் என்ன என்று எங்களுக்குக் காட்டியதற்கு நன்றி. நீங்கள் செய்த பணியை வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகப் பார்ப்பேன். என் பிரார்த்தனைகள்".
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.