மொழி பேதமில்லா ஓர் இசைக் கலைஞனின் சகாப்தம் நிறைவடைந்துள்ளது. இசைக்கு ஏது மொழி என்பதை உணரவைத்த கலைஞன். எம்மொழியில் பாடினாலும் அம்மொழிக்கு சொந்தக்காரராவார். அதுவே எஸ்பிபி. தந்தை சாம்பமூர்த்தி ஆந்திராவில் ஹரிகதைகள் பாடும் கலைஞர். இவரே எஸ்பிபியின் குரு. சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டதால், தந்தையிடம் இசை கற்று வளர்ந்தார். 5-வது வயதில் ‘பக்த ராமதாஸ்’ என்ற நாடகத்தில் தந்தையுடன் இணைந்து நடித்தார் பாலசுப்ரமணியம். ஆந்திராவில் தலைவர்கள், பிரமுகர்கள் முதல் ரசிகர் வரை இவரது அன்பு பெயர் பாலுதான்.
நாடகத்தில் நடித்த பிறகு, இசை, நடிப்பு மீது பற்று அதிகரித்தது. ஆனால், தந்தை அறிவுறுத்தலின்படி, படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள தாய்மாமன் ஸ்ரீநிவாச ராவ் வீட்டில் தங்கி 5-வது வரையும், பிறகு, காளஹஸ்தியில் உள்ள போர்டு ஹைஸ்கூலில் 10-ம் வகுப்பு வரையும் படித்தார். அப்போது இவரது பள்ளி ஆசிரியர்களான ஜி.வி.சுப்ரமணியம், ராதாபதி ஆகியோர் அவரது இசை ஆர்வத்தைக் கண்டு, நாடகத்தில் வரும் பாடல்களை அவரை பாடச் செய்து, அதை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து வழங்கி அவரை ஊக்கப்படுத்தினர்.
பின்னர், திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா கலைக் கல்லூரியில் பியுசி 2 ஆண்டுகள் படித்தார். இந்த சமயத்தில்தான் மதராஸ் ஆல் இந்தியா ரேடியோ நாடகத்தில் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர், விஜயவாடா ஆகாசவாணியில் அவரே பாட்டு எழுதி, மெட்டு அமைத்துப் பாடிய பாடலுக்கு விருதும் கிடைத்தது.
பியுசி தேர்வு எழுதிவிட்டு நெல்லூர் திரும்பிய எஸ்பிபி, நண்பர்களுடன் இணைந்து இசைக்குழு தொடங்கினார். பின்னர், அனந்தபூரில் பொறியியல் கல்லூரியில் படிக்கச் சென்றார். அங்கு சீதோஷ்ண நிலை சரியில்லை என்று கூறி திரும்பி வந்தவர், சென்னையில் ஏஎம்ஐஇ படித்தார். படித்துக்கொண்டே சினிமாவில் பாட வாய்ப்பு தேடி வந்தார். பொறியியல் 2-ம் ஆண்டு படிக்கும்போதே பாட வாய்ப்பு கிடைத்தது. ‘முகமது பின் துக்ளக்’ படத்தில் நடிகை ரமாபிரபாவின் பிறந்தநாளுக்கு ‘ஹேப்பி பர்த் டே டு யூ..’ என்று பாடிக்கொண்டே அந்த காட்சியில் தோன்றுவார் எஸ்பிபி. இதுதான் அவரது முதல் அரங்கேற்றம். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, துளு என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி லட்சோப லட்சம் ரசிகர்களை தன்வசம் இழுத்துக்கொண்டவர் எஸ்பிபி.
ஆந்திராவில் பிறந்தவர் என்பதால், தமிழகம் போலவே ஆந்திராவிலும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 3 தலைமுறை ரசிகர்களைக் கொண்ட இசைக் கலைஞர் பாலு. இவர் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, கிருஷ்ணம் ராஜு, சோபன் பாபு என தொடங்கி தற்போது அவர்களது அடுத்த தலைமுறையான சிரஞ்சீவி, நாகார்ஜுன், வெங்கடேஷ் என்று கடந்து, அவர்களது பிள்ளைகளான ராம் சரண், நாக சைதன்யா போன்றோர் வரை பாடி உள்ளார்.
பிரபல பாடகர் கண்டசாலா மீது அபார பக்தி கொண்ட எஸ்பிபி, ஹைதராபாத்தில் அவருக்கு சிலை வைத்துள்ளார். பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத்தின் நெருங்கிய நண்பர். அவரை ‘அண்ணா’ என்றுதான் அழைப்பார். கே.விஸ்வநாத் இயக்கிய ‘சங்கராபரணம்’ படத்தின் பாடல்கள் அக்காலத்தில் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. அவரது இயக்கத்தில் வெளியான படங்களில் பாடியதற்காக 3 முறை தேசிய விருதும் பெற்றார் எஸ்பிபி.
பன்முகம் கொண்ட கலைஞன்
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட எஸ்பிபியின் மறைவை ஏற்க மனம் மறுக்கிறது. இது ஒரு கனவாகவே இருக்கக்கூடாதா என்று ஆந்திரா, தெலங்கானா மக்களும் கடவுளை வேண்டுகின்றனர். 74 வயதிலும் சிறு பிசுறுகூட தட்டாமல் பாடுவதற்கு எஸ்பிபியால் மட்டுமே முடியும் என்று பெருமிதத்தோடும், கனத்த இதயத்தோடும் கூறுகின்றனர்.
மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதிலும் உயர்ந்து நிற்பவர் எஸ்பிபி. இசையமைப்பாளர்கள் வயதில் சிறியவர்களாயினும், அவர்களை மனதார பாராட்டுவார். அவர்களோடு இணைந்து பணிபுரியும்போது, தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி தனது ஸ்டைலில் பாடி அசத்துவார். இதனால், தெலுங்கு திரையுலகின் அனைத்து இளம் இசையமைப்பாளர்களுக்கும் எஸ்பிபிதான் ஃபேவரிட். தெலுங்கு படங்களில் இப்போதுகூட எஸ்பிபி ஒரு பாடலாவது பாடி விடுவார். அவரது மறைவு தெலுங்கு ரசிகர்களிடம் பெரும்சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரமுகர்கள்,அரசியல் பிரமுகர்கள்என அனைவரையும் மனம் கனக்கச் செய்திருக்கிறது.
இசைக்கு மொழி கிடையாது; அதற்கு அழிவும் கிடையாது. இசையையே தன்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த எஸ்பிபி, அழிவின்றி அந்தஇசையுடனே இரண்டறக் கலந்திருக்கிறார்.