ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. இசையுலகம் இனி அப்படியே இருக்காது என்று எஸ்பிபி மறைவு குறித்து சித்ரா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எஸ்பிபி மறைவு குறித்து, அவருடன் இணைந்து பல பாடல்களை இணைந்து பாடியுள்ள சித்ரா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. இசையுலகம் இனி அப்படியே இருக்காது. உலகம் அப்படியே இருக்காது. என் பாடும் திறனை மேம்படுத்த அவர் வழிகாட்டியதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. நீங்கள் இல்லாமல், உங்கள் அன்பார்ந்த இருப்பு இல்லாமல் ஒரு இசை நிகழ்ச்சியையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. சாவித்திரி அம்மா, சரண், பல்லவி மற்றும் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள்".
இவ்வாறு பாடகி சித்ரா தெரிவித்துள்ளார்.
எஸ்பிபி - சித்ரா இருவருமே நெருங்கிய நண்பர்கள். பல மேடைக் கச்சேரிகளில் இருவரும் இணைந்து பாடி மக்களிடையே கரகோஷத்தை அள்ளிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.