'அண்ணாத்த' படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலையும் எஸ்பிபிதான் பாடியுள்ளார். இதுதான் அவருடைய கடைசிப் பாடல் எனத் தெரிகிறது.
இந்தியத் திரையுலகில் கொண்டாடப்பட்ட எஸ்பிபி இன்று (செப்டம்பர் 25) மதியம் சென்னையில் காலமானார். அவருக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருடைய திரையுலகப் பயணத்தில், அவரது குரலுக்கு வாயசைக்காத நடிகர்கள் என்பது மிகவும் குறைவுதான்.
ரஜினி நடித்த படங்களில், அவருக்கான அறிமுகப் பாடலை எஸ்பிபிதான் பல படங்களில் பாடியிருப்பார். அந்தப் பாடல்கள் அனைத்துமே மிகவும் பிரபலமாயின. இறுதியாக வெளியான 'தர்பார்' படத்தில்கூட 'நான்தான்டா' என்ற அறிமுகப் பாடலைப் பாடியவர் எஸ்பிபிதான்.
தற்போது அவருடைய கடைசிப் பாடலாக ரஜினி நடித்த 'அண்ணாத்த' படத்தின் பாடலாக இருக்கும் எனத் தெரிகிறது. அந்தப் படத்தில் இமான் இசையில் அறிமுகப் பாடலை எஸ்பிபி பாடியிருக்கிறார்.
இதனை இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"எஸ்பிபி சாருடைய இழப்பு எத்தனையோ இசை ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றம், பெரிய வலியைக் கொடுத்துள்ளது. எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார். நம்முடைய எத்தனையோ இரவுகளுக்கு ஒரு துணையாக இருந்திருக்கிறார். என்னுடைய இசைப் பயணத்தில் சின்னதிரையில் வேலை செய்யும்போதும் சரி, வெள்ளித்திரையில் வேலை செய்யும்போதும் சரி அவருடன் பணிபுரிய ஒருசில வாய்ப்புகள் கிடைத்தன.
'ஜில்லா' படத்தில் 'பாட்டு ஒண்ணு' பாடலை எஸ்பிபி சாரும், ஷங்கர் மகாதேவன் சாரும் இணைந்து பாடியிருப்பார்கள். திரையில் விஜய் சாரும், மோகன்லால் சாரும் ஆடியிருப்பார்கள். அதற்குப் பிறகு விரைவில் வெளிவர இருக்கும் 'அண்ணாத்த' படத்தில் ரஜினி சாருடைய அறிமுகப் பாடலைப் பாடியிருக்கிறார். அவருடைய கடைசிப் பாடல் ரஜினி சாருக்காக அதுவும் என்னுடைய இசையில் நடந்திருக்கிறது என நினைக்கும்போது ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். அதைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
எஸ்பிபி சார் அவ்வளவு அன்பானவர், பண்பானவர். அற்புதமான மனிதர். அவருக்கு மாற்றே கிடையாது. உங்களை மிஸ் பண்ணுவேன் எஸ்பிபி சார். லவ் யூ”.
இவ்வாறு இமான் தெரிவித்துள்ளார்.