‘’காலையில் எழுந்ததும் எஸ்.பி.பி.யின் பக்திப்பாடல்களைக் கேட்பதும் வீட்டில் இருக்கும் போது அவர் பாடல்களைக் கேட்பதும் பயணங்களின் போது அவரின் பாடலைக் கேட்டுக் கொண்டே பயணிப்பதும் என கடந்த ஐம்பது வருடங்களாக இரண்டறக்கலந்துவிட்டவர் எஸ்.பி.பி. என்று நடிகை கே.ஆர்.விஜயா தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் கடந்த 51 நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று செப்டம்பர் 25ம் தேதி காலமானார்.
அவரின் மறைவு குறித்து திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வருத்தங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு குறித்து நடிகை கே.ஆர்.விஜயா தெரிவித்திருப்பதாவது:
சகோதரர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு கேட்டு மிகவும் வேதனையாக உள்ளது. அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
காலையில் எழுந்தவுடன் நாம் கேட்கும் அவருடைய பக்திப் பாடல்களில் தொடங்கி, வீட்டில் இருக்கும் பொழுதும், பயணங்களின் போதும் என்று கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கின்றன எஸ்.பி.பி.யின் பாடல்கள்.
கோடானு கோடி ரசிகர்களுக்காக பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியதால் களைத்துப்போய் ஓய்வெடுக்க சென்று விட்டாரோ என்று நினைத்தாலும், இல்லை இல்லவே இல்லை - காற்றில் புல்லாங்குழல் இசை கலந்தது போல எஸ்.பி.பி.யின் குரல் காற்றில் இரண்டறக்கலந்திருக்கிறது. அவர் என்றென்றும் நம்முடனே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்... அவர் தந்த இனிமையான பாடல்களின் மூலமாக!
இவ்வாறு நடிகை கே.ஆர்.விஜயா தெரிவித்துள்ளார்.