'ஆயுத எழுத்து' சீரியல் நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று உண்மையில் எனக்குத் தெரியாது என்று சரண்யா தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியல்கள் மற்றும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தயாராகி வருகிறார்கள். இதனால் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
இதில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற 'மெளனராகம்' மற்றும் 'ஆயுத எழுத்து' ஆகிய இரண்டு சீரியல்கள் அவசரமாக முடிக்கப்பட்டன. இதில் 'மெளனராகம்' சீரியலுக்கு மட்டும் விரைவில் 2-ம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. ஆனால், 'ஆயுத எழுத்து' சீரியல் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென முடிக்கப்பட்டது.
இதனால், பார்வையாளர்கள் மத்தியில் குழப்பம் உண்டானது. பலரும் 'ஆயுத எழுத்து' தொடருமா அல்லது முடிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பி வந்தார்கள்.
இதனிடையே, 'ஆயுத எழுத்து' சீரியலில் நாயகியாக நடித்து வந்த சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
" 'ஆயுத எழுத்து' சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன் என்பது குறித்துப் பலரும் கேள்வி கேட்கின்றனர். சீரியல் நிறுத்தப்பட்டது உண்மைதான். ஆனால், அதற்கான காரணம் என்னவென்று உண்மையில் எனக்குத் தெரியாது. சரியான காரணம் தெரியவரும்போது அதை நிச்சயம் ரசிகர்களுக்கு அறிவிப்பேன். மேலும், ஒரு நல்ல சீரியலில் மீண்டும் உங்களைச் சந்திப்பேன்".
இவ்வாறு சரண்யா தெரிவித்துள்ளார்.