பாஜகவில் விஷால் சேர உள்ளதாக வெளியான தகவலை அவருடைய மேலாளர் மறுத்துள்ளார்.
2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக இப்போதே அனைத்து கட்சிகளும் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் முதலாவதாக பாஜகவில் பல்வேறு தமிழ்த் திரையுலகினர் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்குமே பதவிகள் கொடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்துக்கு ஆதரவு தெரிவித்து விஷால் ட்வீட் செய்திருந்தார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து பலரும் விஷால், பாஜக கட்சியில் இணையவுள்ளார் என்று கருத்து தெரிவித்து வந்தார்கள்.
இதனிடையே, இன்று (செப்டம்பர் 13) காலை பாஜக கட்சியில் விஷால் இணையவுள்ளார் என்றும், இதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக விஷாலின் மேலாளர் ஹரியிடம் கேட்ட போது, அவர் கூறியிருப்பதாவது:
"எப்படி இந்த மாதிரியான தகவல்கள் வெளியாகிறது எனத் தெரியவில்லை. பாஜக கட்சியில் இணைய விஷால் சார் நேரம் கேட்கவுமில்லை. அதே போல், அவர் பாஜக கட்சியில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலிலும் உண்மையில்லை"
இவ்வாறு ஹரி தெரிவித்தார்.
மேலும், பாஜகவில் சேர உள்ளதாக வெளியான தகவலுக்கு விஷாலும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.