மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய உடலுக்கு சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் 'அது இது எது', ‘கலக்கப் போவது யாரு’ உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி (43). உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (செப்டம்பர் 10) காலமானார்.
சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரோடு விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்த ரோபோ ஷங்கர், ராமர், மணிமேகலை, 'சிரிச்சா போச்சு' டீம் உள்ளிட்ட பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று (செப்டம்பர் 11) காலையில் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் விஜய் சேதுபதி. அப்போது அங்கிருந்த வடிவேல் பாலாஜியின் தாயாரிடம் நிதியுதவியும் வழங்கினார். உதயநிதி ஸ்டாலினும் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்றாலும், வடிவேல் பாலாஜியின் 2 குழந்தைகள் கல்விச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
சேத்துப்பட்டில் உள்ள வடிவேல் பாலாஜியின் இல்லத்திலிருந்து அவரது உடல் 2:30 மணியளவில் நல்லடக்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருடன் பணிபுரிந்த 'சிரிச்சா போச்சு' குழுவினர் அனைவருமே இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். சுமார் 3:30 மணியளவில் நுங்கம்பாக்கம் இடுகாட்டில் கிறிஸ்துவ முறைப்படி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.