தமிழ் சினிமா

வடிவேல் பாலாஜியின் பெயரும் புகழும் அழியாமல் இருக்கும்; அந்தளவுக்கு உழைத்திருக்கிறார்: 'சிரிச்சா போச்சு' குழு

செய்திப்பிரிவு

வடிவேல் பாலாஜியின் பெயரும் புகழும் அழியாமல் இருக்கும் எனவும் அவர் அந்த அளவுக்கு உழைத்திருக்கிறார் என்று 'சிரிச்சா போச்சு' குழு தெரிவித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அது இது எது', 'கலக்கப் போவது யாரு' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலு மாதிரியே கெட்டப் போட்டு காமெடி செய்வதால் 'வடிவேல்' பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு, போதிய பணவசதி இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (செப்டம்பர் 10) காலை காலமானார்.

'அது இது எது' நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து வடிவேல் பாலாஜி பங்கெடுத்து வருகிறார். அந்தக் குழுவினர் அனைவருக்குமே மிகவும் நெருங்கிய நண்பர். தற்போது வடிவேல் பாலாஜி காலமானது குறித்து 'சிரிச்சா போச்சு' குழுவினர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"கிட்டதட்ட 15 வருட காலமாக ஒன்றாக நடித்துச் சிரிக்க வைத்தோம் என்பதை விட, குடும்பமாக வாழ்ந்தோம் என்று தான் சொல்ல வேண்டும். எங்க அனைவருக்குமே ஒரு முன்னோடி வடிவேல் பாலாஜி என்று சொல்லலாம். கவுண்டர் வசனம் என்றாலே வடிவேல் பாலாஜி அண்ணன் தான் ஞாபகத்துக்கு வருவார்.

எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும் டீம் ஆகத் தான் செல்வோம். அவ்வளவு சந்தோஷமாக இருப்போம். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட 'அது இது எது' டீம்மை வைத்து இன்னொரு 'அது இது எது' பண்ணனும்டா என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

எங்களுடைய டீம்முக்கு மிகப்பெரிய இழப்பு தான். எங்கள் குடும்பத்தினருடன் இருந்ததை விட, நாங்கள் எல்லாம் நிகழ்ச்சிக்காக ஒன்றாக இருந்தது தான் அதிகம். ஒன்றாகப் பயணித்துப் பல ஊர்களுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். வடிவேல் பாலாஜி இல்லை என்பதை நினைக்கவே முடியவில்லை.

எந்தவொரு சிக்கலான இடம் இருந்தாலும், உடனே இயக்குநர் பாலாஜியை இறக்குவிடுடா என்று தான் சொல்வார். ஏனென்றால் பாலாஜி அந்தளவுக்குத் திறமையானவர். அனைவரையும் கவலைகளை மறந்து சிரிக்க வைப்பவர். கவலையே இல்லாத ஒரு மனிதர்.

வடிவேலு மாதிரி பலரும் மிமிக்ரி செய்தாலும், அவரை மட்டும் தான் வடிவேல் பாலாஜி என்று அழைக்கிறோம். இதற்குப் பிறகு வடிவேல் பாலாஜி மாதிரி இன்னொரு கலைஞனை எந்தவொரு தொலைக்காட்சியினாலும் கொண்டு வர முடியாது. மக்களைச் சிரிக்க வைக்கக் கூடிய கலைஞர்களுக்குத் தான் ஏகப்பட்ட வருத்தங்களும், கவலைகளும் இருக்கிறது. இந்த மாதிரியான மரணம் இனி யாருக்கும் வரக்கூடாது என்பதே எங்களுடைய வேண்டுகோள்.

இன்று அவருடைய இழப்பை எங்களுடைய குடும்பத்தில் ஒரு இழப்பாகவே பார்க்கிறோம். எவ்வளவோ அழுதுவிட்டோம். இன்னும் அவருடைய இழப்பை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்றைக்குமே அவருடைய பெயரும், புகழும் அழியாமல் இருக்கும். அந்தளவுக்கு வடிவேல் பாலாஜி உழைத்திருக்கிறார்.

இவ்வாறு 'சிரிச்சா போச்சு' குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT