'ஜென்டில்மேன் 2' படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளதாக கே.டி.குஞ்சுமோன் அறிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மதுபாலா, சரண்ராஜ், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜென்டில்மேன்'. கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலமாகவே ஷங்கர் இயக்குநராக அறிமுகமானார்.
அதற்குப் பிறகு 'காதல் தேசம்', 'காதலன்', 'ரட்சகன்' உள்ளிட்ட பல படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். சில வருடங்களாகத் தயாரிப்பிலிருந்து விலகியிருந்தார். தற்போது மீண்டும் படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். இதில் முதல் தயாரிப்பாக 'ஜென்டில்மேன் 2' படத்தை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் கூறியிருப்பதாவது:
" 'ஜென்டில்மேன்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட்டானது. 'ஜென்டில்மேன்' படத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டத்தை 'ஜென்டில்மேன் 2'-ல் காணலாம்.
நவீன தொழில்நுட்பத்தில், ஹாலிவுட் படங்களின் தரத்தில், மெகா பட்ஜெட்டில் 'ஜென்டில்மேன் 2' உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்தப் படம் தயாராகவுள்ளது.
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 'ஜென்டில்மேன் 2' பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். உலகம் முழுவதும் முதலில் திரையரங்குகளில் வெளியான பிறகுதான் மற்ற ஊடகங்களில் வெளியிடப்படும்".
இவ்வாறு கே.டி.குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.