எஸ்பிபி உடல்நிலை குறித்து சரண் பேசியுள்ள வீடியோவில், ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாகச் சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது. மருத்துவமனை அறிக்கை தவிர்த்து அவருடைய மகன் எஸ்பிபி சரணும் அவ்வப்போது அப்பாவின் உடல்நிலை குறித்து ட்வீட்களும், வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.
அதன்படி, இன்று (செப்டம்பர் 10) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
"அப்பாவின் உடல்நிலை குறித்து, நான் அடிக்கடி பகிர்வதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், முன்னரே சொன்னதுபோல அப்பாவின் உடல்நிலை மெதுவாக, ஆனால் நிலையாகத் தேறி வருகிறது. அதற்கு அதிக நேரம் ஆகிறது. அதனால் வரும் நாட்களிலும் நாங்கள் அதிரடியான மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை.
அவர் நிலையாக, ஆரோக்கியமாக, மெதுவாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறார் என்கிற செய்தியையே தினமும் உங்களுக்குச் சொல்வதில் அர்த்தமில்லை என்று நினைத்தேன். அதனால்தான் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உங்களிடம் பகிர்ந்து வருகிறேன்.
அப்பாவை நான் தினமும் சந்தித்து வருகிறேன். ஆரோக்கியமாக இருக்கிறார். தொடர்ந்து எக்மோ, செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் இருந்து வருகிறார். எல்லாம் நலமாக இருக்கிறது. எந்தச் சிக்கலும் இல்லை. உங்கள் அனைவரின் அன்பு, பிரார்த்தனைகளுக்கு, அக்கறைக்கு மீண்டும் பெரிய நன்றி.
நான் உங்களிடம் செய்திகளைப் பகிர்ந்து வருகிறேன். எனவே அப்பாவின் உடல்நலம் குறித்து ஊடகங்கள் சொல்லும் செய்திகள் எதையும் நம்ப வேண்டாம். அவர்களுக்கு எங்கிருந்து தகவல் கிடைக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் நானே நேரடியாகவோ அல்லது எனது செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் மூலமாகவோ அல்லது மருத்துவமனை மூலமாகவோ சொல்லப்படும்.
அப்பா வீடு திரும்பிவிட்டார், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கப் போகிறது என்பது பற்றிய செய்திகளெல்லாம் பார்க்க முடிந்தது. இவை உண்மையல்ல. இந்த இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வந்தன. ஒரு ஊடகம் அவர் வீடு திரும்புகிறார் என்று சொன்னது. இன்னொரு பக்கம் அவரது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்திருப்பதாகச் சொல்லப்பட்டது. எதுவுமே உண்மையில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து கொண்டே தனது ரசிகர்களுக்காக அப்பா பாடினார் என்று வந்த செய்தியும் உண்மையில்லை.
இதுபோன்ற செய்திகள் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தின் மீது எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதிகாலை ஆரம்பித்து நள்ளிரவு வரை எங்களுக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. நூற்றுக்கணக்கான அழைப்புகள். எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அப்பாவின் ரசிகர்கள் அப்பாவின் நிலை குறித்துத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு உண்மையான தகவலைத் தர வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.
தயவுசெய்து எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.
மீண்டும் உங்கள் அனைவரின் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு நன்றி. அப்பா தேறி வருகிறார். உங்கள் பிரார்த்தனைகள் வேலை செய்கின்றன. அப்பா மயக்க நிலையில் இல்லை. விழிப்புடன் இருக்கிறார். விரைவில் குணமாகிவிடுவார். எவ்வளவு விரைவில் என்பது கடவுளின் கைகளில் தான் இருக்கிறது".
இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.