அஜித் - சுதா கொங்கரா படத்தைத் தயாரிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு ஏஜிஎஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா நிலைமை சரியானவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
'வலிமை' படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. இதில் 'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா, அஜித் படத்தை இயக்கவுள்ளார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.
விஜய்க்காக தயார் செய்த கதையை, அஜித்திடம் சொல்லியிருப்பதாகவும் இந்தக் கூட்டணி இணையும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இந்தச் செய்தி சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது.
இது தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"2020-ம் ஆண்டில் நாங்கள் எந்தத் திரைப்படத்துக்காகவும் ஒப்பந்தம் போடவில்லை. சில பொய்யான செய்திகளைப் பார்க்க நேர்ந்தது. அதனால் ஏஜிஎஸ் சார்பாக தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தேன். யாரையும் நாங்கள் சந்திக்கவோ, உரையாடவோ இல்லை. இந்தக் கரோனா நெருக்கடி முடியக் காத்திருக்கிறோம்".
இவ்வாறு அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.