தமிழ் சினிமா

இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாள் ஸ்பெஷல்: பெரும் நம்பிக்கை அளிக்கும் இளம் இயக்குநர் 

எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளில் தடம் பதித்த இளம் இயக்குநர்களில் ரசிகர்கள், விமர்சகர்களின் பரவலான மரியாதையையும் அன்பையும் பெற்றிருப்பவர்களில் ஒருவரான ஹெச்.வினோத் இன்று (செப்டம்பர் 5) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

வேலூர் மாவட்டத்தில் பிறந்தவரான வினோத் பார்த்திபன், ராஜூமுருகனிடம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இவர் இயக்கிய முதல் படமான 'சதுரங்க வேட்டை' 2014-ல் வெளியானது. தமிழ் சினிமாவில் நீண்ட அனுபவம் கொண்ட நடிகரும் இயக்குநருமான மனோபாலா அந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தார். பாலிவுட்டில் ஒளிப்பதிவாளராகவும் கோலிவிட்டில் நாயக நடிகராகவும் அறிமுகமாகியிருந்த நடராஜன் கதாநாயகனாக நடித்தார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வணிகரீதியாகவும் வெற்றிபெற்ற 'சதுரங்க வேட்டை' தமிழ் சினிமாவுக்கு வினோத்தின் வரவை அனைவரையும் கவனிக்க வைத்தது. அதோடு மனோபாலா, நட்ராஜ் ஆகியோருக்கும் முக்கியமான படமாக அமைந்தது.

அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை' ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார் வினோத். இவையும் வணிகரீதியாக வெற்றிபெற்றதோடு விமர்சகர்கள், ரசிகர்களிடம் பரவலான பாராட்டைப் பெற்றன. தற்போது 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நாயகனாக நடித்த அஜித்தை வைத்து 'வலிமை' படத்தை இயக்கிவருகிறார் வினோத்.

வினோத்தின் மூன்று படங்களும் வெவ்வேறு வகைமைகளைச் சேர்ந்தவை 'சதுரங்கவேட்டை' மற்றவர்களை ஏமாற்றிப் பணம் பறிப்பவனை நாயகனாகக் கொண்டிருந்தது. பல புத்திசாலித்தனமான சுவாரஸ்யமான காட்சிகளுடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. பகடியும் அழுத்தமும் நிரம்பிய வசனங்கள் வினோத்தின் எழுத்துத் திறனைப் பறைசாற்றின. ஏமாற்றுபவர்கள் மட்டுமல்லாமல் ஏமாறுபவர்களின் பேராசையையும் சாடிய படமாக அமைந்திருந்ததே 'சதுரங்க வேட்டை' படத்தின் தனிப்பெரும் சிறப்பு. எதிர்மறை நாயகத்தன்மை மீதான ஈர்ப்பை அடியொட்டி நாயகனின் தவறுகளை நியாயப்படுத்தாமல் அவன் திருந்துவதுபோல் கதை அமைத்ததோடு அதை நம்பகத்தன்மையுடன் பதிவு செய்திருந்த விதம் ஒரு படைப்பாளியாக வினோத்தின் சமூகப் பொறுப்புணர்வுக்குச் சான்றாக அமைந்திருந்தது. முதல் படத்திலேயே சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசின் விருதை வென்றார் வினோத்

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான கார்த்தி நாயகனாக நடித்தார். 1990களில் தொடங்கி பத்தாண்டுகளுக்கு மேல் தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளிலும் அச்சாலைகளை ஒட்டிய வீடுகளிலும் கொள்ளை, கொலையில் ஈடுபட்ட கொடியவர்களின் கொட்டத்தை அடக்க காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட ஆபரேஷன் பவாரியா என்ற என்கிற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்ட 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் ஒரு சுவாரஸ்யமும் திகிலும் நிரம்பிய த்ரில்லராக அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அதோடு காவல்துறை நடைமுறைகளையும் கொள்ளைக் கூட்டத்தினரின் பின்னணி, அவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்கிற வரலாறு ஆகியவை திரைக்கதையில் பதிவு செய்யப்பட்டிருந்த விதத்தில் வெளிப்பட்ட வினோத்தின் ஆய்வு நோக்குக்கும் உண்மைக்கு நெருக்கமாக இருப்பதற்கான கடின உழைப்பும் அனைவரையும் வியந்து பாராட்ட வைத்தது.

இந்த இரண்டு படங்களின் மூலம் ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டை ஈர்த்த வினோத் தமிழ் சினிமாவின் முதல் நிலை நட்சத்திரங்களின் கவனத்தையும் ஈர்த்தார். சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்திருந்த நடிகர் அஜித், வினோத்துடன் பணியாற்ற விரும்பினார். 2016-ல் வெளியாகி விமர்சன ரீதியாகப் பெரிதும் பாராட்டப்பட்ட 'பிங்க்' என்ற இந்திப் படத்தின் தமிழ் மறு ஆக்கத்தில் நடிக்க விரும்பிய அஜித் அதை வினோத் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முதலில் தயங்கிய வினோத் பிறகு அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் 'நேர்கொண்ட பார்வை' என்ற தரமான திரைப்படம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்தது. 'பிங்க்' திரைப்படத்தின் கதையையோ வசனங்களையோ அதன் சாரமான 'இல்லை என்றால் இல்லை' (No Means No) என்கிற பெண்ணுரிமை சார்ந்த அதன் சாரமான செய்தியையோ துளியும் சிதைக்காமல் அசல் பதிப்புக்கு முற்றிலும் நேர்மையாக அதே நேரம் தன்னுடைய தனித்தன்மையையும் கைவிடாத வகையில் 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கியிருந்தார் வினோத். உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் அஜித்தின் நெடிய திரைவாழ்வில் பெருமைக்குரிய படங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது அந்தப் படம்.

தற்போது மீண்டும் அஜித்தை வைத்து 'வலிமை' படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் வினோத் அதையும் ஒரு மிகத் தரமான படமாகத்தான் உருவாக்கிக்கொண்டிருப்பார் என்று உறுதியாக நம்பலாம். இதுவும் முந்தைய படங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறு வகைமையைச் சேர்ந்ததாகவும் அவருடைய தனித்தன்மை வாய்ந்த சிறப்புகள் இன்னும் பிரமாதமாக வெளிப்படுவதாகவும் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் சினிமா ரசிகர்களின் பெருமிதத்துக்குரிய இளம் படைப்பாளியான வினோத் இன்னும் பல சிறப்பான படங்களைக் கொடுத்து ரசிகர்களின் அன்பையும் மதிப்பையும் தக்கவைத்து விருதுகளையும் வாரிக் குவிக்க வேண்டும் என்று அவருடைய பிறந்தநாளான இன்று மனதார வாழ்த்துவோம்.

SCROLL FOR NEXT