தமிழ் சினிமா

'மங்காத்தா' வெளியான நாள்: வில்லத்தன ஹீரோயிசத்தின் உச்சம் 

ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் கதாநாயக நடிகர்களில் 200 படங்களில் நடித்தவர்கள் மிகச் சிலரே. 100 படங்கள் என்னும் மைல்கல்லைக் கடந்தவர்கள் கணிசமானோர் இருக்கிறார்கள். புத்தாயிரத்தில் மாறிவிட்ட திரைத்துறை வணிக சூத்திரங்கள், ஒரு ஆண்டில் ஒரு நடிகர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இப்போது ஒரு நாயகன் 50 படங்களில் நடிப்பதும் பெரும் சாதனைதான். அப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தியவர்களில் ஒருவர் ரசிகர்களால் 'தல' என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படுபவரும் இன்றைய நட்சத்திர ஏணியில் உச்சப் படிக்கட்டுகளில் இருக்கும் ஒரு சிலரில் ஒருவருமான அஜித். அவருடைய 50-ம் படமான 'மங்காத்தா' வெளியான நாள் இன்று (ஆகஸ்ட் 31).

மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்று பல சாதனைகளை நிகழ்த்திய பல நாயக நடிகர்களுக்கு 50, 100 போன்ற மைல்கள் படங்கள் வெற்றிப் படமாக அமையவில்லை. விஜயகாந்தின் 100-ம் படமான 'கேப்டன் பிரபாகரன்' மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு அவருடைய நட்சத்திர அந்தஸ்தைப் பன்மடங்கு உயர்த்திய படமாகவும் அவருடைய நெடிய திரை வாழ்வில் மறக்க முடியாத படங்களில் ஒன்றாகவும் அமைந்தது. அந்த வகையில் விஜயகாந்துக்கு 'கேப்டன் பிரபாகரன்' படத்தைப் போல் அஜித்துக்கு 'மங்காத்தா'. அது 100 இது 50 என்பது மட்டும்தான் வித்தியாசம். மற்றபடி 'மங்காத்தா'வும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு அஜித்தின் திரை வாழ்வில் மறக்க முடியாத அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்த படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

ஆனால் தன்னுடைய இந்த மைல்கல் படத்தில் பலர் செய்யத் துணியாத விஷயங்களைச் செய்தார் அஜித். இந்தப் படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றங்களைக் களைத்தார். பாதி நரைத்துவிட்ட தலைமுடியில் டை அடிக்காமல் ஒரிஜினல் ஹேர் ஸ்டைலுடன் தோன்றினார்.

அதுவே 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக் என்று பிரபலமானது. இந்த இரண்டுக்கும் மேலாக பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் பண வெறி பிடித்த அது குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாத முழுக்க முழுக்க எதிர்மறை குணாம்சம் கொண்ட மையக் கதாபாத்திரத்தில் நடித்தார் அஜித்.

பொதுவாக எதிர்மறை குணாம்சம் கொண்ட நாயகனை மையமாகக் கொண்ட படங்களில் நாயகன் ஏதாவது ஒரு கட்டத்திலோ க்ளைமேக்ஸிலோ திருந்திவிடுவது போல் கதையை அமைத்திருப்பார்கள். அல்லது அவர் அப்படி தீய செயல்களில் ஈடுபடுவதை நியாயப்படுத்துவது போன்ற முன்கதை இருக்கும்.

ஆனால் 'மங்காத்தா'வில் இப்படி எதுவும் இருக்காது. இது முழுக்க முழுக்க ஒரு வில்லனை நாயகனாக்கும் கதை. இந்தப் புதுமைக்காகவும் அஜித்தும் இயக்குநர் வெங்கட் பிரபுவும் இந்த அம்சத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இதைக் கையாண்ட விதமும்தான் இந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கும் இது வெகுஜன சினிமா ரசிகர்கள் பலரின் ஃபேவரைட்டாக அமைந்திருப்பதற்குக் காரணம்.

'வாலி', 'அசோகா', 'பில்லா' போன்ற படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இந்தப் படத்தில்தான் வில்லத்தனத்தையே ஹீரோயிசமாக்கி இருந்தார் அஜித். அவருடைய உடல்மொழியும் ஸ்டைலும் நடையும் நடிப்பும் ஒவ்வொன்றும் விநாயக் மகாதேவ் கதாபாத்திரத்தின் வில்லத்தனங்களைக் கூட ஆர்ப்பரித்துக் கொண்டாட வைத்தது.

'சென்னை 600028', 'சரோஜா', 'கோவா' போன்ற கலகலப்பு மிகுந்த வெற்றிப் படங்களை இயக்கியிருந்த வெங்கட் பிரபு முதல் முறையாக அஜித் போன்ற ஒரு முன்னணி நட்சத்திரத்துடன் இந்தத் திரைப்படத்தில் கைகோத்தார். முதல் படத்திலேயே அவருக்கும் அவருடைய மாஸ் ஹீரோ இமேஜுக்கும் ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்புக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நியாயம் செய்யும் படமாகக் கொடுத்துவிட்டார்.

அதே நேரம் அஜித் மீது மட்டும் கவனம் குவிக்காமல் அஜித்துடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபடும் ஐவர், அவர்களுக்கான பின்னணி, கொள்ளையைத் தடுக்க முனையும் காவல்துறை தரப்பு, பணத்தைப் பறிகொடுக்கும் ஐபிஎல் சூதாட்ட தரப்பு என பல கோணங்கள் கொண்ட கதையையும் ஒவ்வொன்றுக்கு வலுவான பின்னணியுடன் கூடிய கதாபாத்திரங்களை அமைத்து அவற்றுக்குச் சரியான நடிகர்களைத் தேர்வு செய்து நகைச்சுவை., ரொமான்ஸ், கிளாமர், த்ரில் என அனைத்து அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து ஒரு சிறப்பான மாஸ் க்ரைம் த்ரில்லரை உருவாக்கியிருந்தார்.

குறிப்பாகக் கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதற்கான காவல்துறை குழுவின் தலைமை அதிகாரியாக அர்ஜுனுக்கு நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார். அர்ஜுனும் அந்தக் கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். நாயகி த்ரிஷா மிக அழகாக இருந்தார்.

அஜித்துடன் அவருடைய கெமிஸ்ட்ரி சிறப்பாக வொர்க் அவுட் ஆகியிருந்தது. ஜெயபிரகாஷ், வைபவ், பிரேம்ஜி, மஹத், அஸ்வின், ஆண்ட்ரியா, அஞ்சலி என துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர்களும் தமது பங்கைச் சிறப்பாக அளித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களும் தீம் மியூசிக்கும் அஜித்தின் மாஸ் காட்சிகளுக்கான இசைத் துணுக்குகளும் படத்துக்கு பெரும் பலமாக அமைந்தன. க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் அனைவரையும் ஆர்ப்பரிக்க வைத்தது.

இப்படி அனைவருடைய சிறப்பான பங்களிப்பு, அவற்றை ஒருங்கிணைத்து தனது சுவாரஸ்யமான திரைக்கதைக்குப் பயன்படுத்திக்கொண்ட வெங்கட் பிரபுவின் புத்திசாலித்தனம், இமேஜ் பார்க்காமல் தன்னுடைய நடிப்பால் திரை ஆளுமையால் படத்தைத் தோள்களில் சுமந்த அஜித் என அனைவருடைய கூட்டு உழைப்பால் 'மங்காத்தா' என்றென்றைக்கும் மறக்க முடியாத இனிமையான விளையாட்டாக அமைந்துவிட்டது.

SCROLL FOR NEXT