'மெர்சல்' படத்தின் பிரச்சினையைத் தொடர்ந்து, 'சர்கார்' படத்துக்கும் பிரச்சினை வரும் என்று விஜய் கணித்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்த முதல் படம் 'துப்பாக்கி'. அந்தப் படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பால் விஜய்யின் பிடித்தமான இயக்குநர்களில் முக்கியமானவராக மாறினார் ஏ.ஆர்.முருகதாஸ். 'துப்பாக்கி' படத்தைத் தொடர்ந்து 'கத்தி', 'சர்கார்' ஆகிய படங்களில் இணைந்து இந்தக் கூட்டணி பணிபுரிந்தது.
தற்போது இக்கூட்டணி 'தளபதி 65' படத்தில் 4-வது முறையாக இணைந்து பணிபுரியவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இந்தக் கரோனா ஊரடங்கில் 'தளபதி 65' பணிகளுக்கு இடையே, டோக்கியோ தமிழ்ச் சங்கத்துக்கு இணையம் வழியே பேட்டியொன்றை அளித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் விஜய் படங்கள் தொடர்ச்சியாக வெளியீட்டில் பிரச்சினைகள் ஏற்படுவது குறித்த கேள்விக்கு ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பதாவது:
"விஜய்யின் மிகப்பெரிய பலம்தான் மற்றவர்களுக்குப் பயத்தைத் தருகிறது. அவரது அசாத்திய வளர்ச்சி, அவர் உயர்ந்து வந்துவிடுவாரோ என்று மற்றவர்களுக்குப் பயம் வருகிறது. அதன் வெளிப்பாடுதான் இது.
'சர்கார்' படத்தின் கதையைச் சொல்லி அவரிடம் ஒப்புதல் வாங்கிவிட்டேன். அப்போது 'மெர்சல்' வெளியானது. அதில் சில பிரச்சினைகள் வந்தபிறகு என் அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்தித்தார்.
'ஒரே ஒரு வசனத்துக்கு இப்போது நடக்கும் பிரச்சினையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், உங்கள் படமே நடப்பு அரசியலை வைத்துதான். எனவே பார்த்துக் கொள்ளுங்கள். நான் எதிர்கொண்டுவிடுவேன், உங்களால் முடியுமா' என்று விஜய் கேட்டார்.
'ஒன்றும் பிரச்சினையில்லை. பார்த்துக் கொள்கிறேன்’ என்று நான் சொல்லிவிட்டேன். எனவே, படம் எடுப்பதற்கு முன்னாலேயே பிரச்சினை வரும், வந்தால் எதிர்கொள்ளலாம் என்றே நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.
நான் எதிர்பார்த்ததை விட வெவ்வேறு விதமாகப் பிரச்சினைகள் வந்தன. நேரடித் தாக்குதல் வரும் என்று நினைத்தோம். பலர் சதி வேலைகள் செய்தனர். ஆனால், இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும். இதனால் ஆச்சரியமோ, வேதனையோ எனக்கில்லை".
இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.