தமிழ் சினிமா

நடிகர் விஷால் பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையிலும் திரைக்கு வெளியிலும் வெற்றி நாயகன்! 

எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் புத்தாயிரத்துக்குப் பிறகு வந்த இளம் தலைமுறை நாயக நடிகர்களில் ஒருவரும் முன்னணி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருப்பவருமான விஷால் இன்று (ஆகஸ்ட் 29) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

ஆக்‌ஷன் அழகன்

இந்திய வெகுஜன சினிமாவில் ஒரு நடிகர் முன்னணிக் கதாநாயகனாக உயர வேண்டும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால் அவர் ஆக்‌ஷன் படங்களுக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பொருத்தமானவராக இருக்க வேண்டும். அதாவது பரவலான ரசிகர்கள் அவரை ஆக்‌ஷன் படங்களில், சண்டைக் காட்சிகளில் ரசிக்க வேண்டும். அப்படி இருக்கையில் சில நடிகர்கள் மட்டும் ஆக்‌ஷன் ஹீரோவாக சண்டைக் காட்சிகளில் சிறப்பாக வெளிப்படும் தன்மைக்காகத் தனிக் கவனமும் ரசிகர் வட்டத்தையும் பெற்றுவிடுவதுண்டு. இந்தத் தலைமுறை நட்சத்திர நடிகர்களில் அந்த இடத்தைப்பெற்றிருப்பவர் விஷால். அவருடைய இயல்பான உயரமும் எவ்வளவு வயதானாலும் துளியும் தளர்வடையாத கட்டுக்கோப்பான உடலமைப்பும் அவற்றைத் தாண்டி அவர் செலுத்தும் அபார உழைப்பும் அவர் நடிக்கும் சண்டைக்காட்சிகளையும் மாஸ் காட்சிகளையும் பெரிதும் ரசிக்க வைக்கின்றன. இதுவே ஒரு நாயக நடிகராக அவருடைய வெற்றியின் முதன்மை ரகசியம்.

உயரமும் உடலமைப்பும்

பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனான விஷால் இயக்குநராகவும் கனவுகளுடன் சினிமா உலகில் நுழைந்தவர். 'வேதம்' படத்தில் நடிகர்-இயக்குநர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 2004-ல் வெளியான 'செல்லமே' படத்தின் கதாநாயகனாக நடித்ததன் மூலம் நடிகரானார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காந்தி கிருஷ்ணா இயக்கிய அந்தப் படம் வித்தியாசமான கதையமைப்பைக் கொண்டிருந்ததோடு அனைத்து வெகுஜன அம்சங்களையும் உள்ளடக்கிய த்ரில்லர் படமாக அமைந்திருந்தது. விளைவாக விஷால் நடித்த முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது.

அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடித்த 'சண்டக்கோழி' திரைப்படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. மதுரை மண்ணை மையமாகக் கொண்ட கதையில் நட்பு, காதல், குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை. வீரம், ஆக்‌ஷன் என அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்திருந்தன. விஷாலுக்கான சண்டைக் காட்சிகளும் அதில் அவர் பொருந்திய விதமும் இந்தப் படத்தின் முதன்மை சிறப்பம்சங்களாக அமைந்தன. இதைத் தொடர்ந்து 'திமிரு', 'தாமிரபரணி', 'மலைக்கோட்டை' என விஷால் நடித்த ஆக்‌ஷன் படங்கள் வெற்றிபெற்றன. ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக விஷால் தவிர்க்க முடியாத இடத்தை அடைந்தார். நட்சத்திர ஏணியிலும் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தார். 'சத்யம்' படத்தில் காவல்துறை அதிகாரியக் நடித்தார். அதற்காகக் கடினமாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் உடலமைப்பைக் கொண்டுவந்தார்

ஆக்‌ஷனைத் தாண்டிய நடிப்பு

2010-ல் வெளியான 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் மூன்று பெண்களை ஒரே நேரத்தில் காதலிக்கும் பிளேபாய் வேடத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் வணிகரீதியாக வெற்றிபெற்றது. அடுத்த ஆண்டு பாலா இயக்கத்தில் 'அவன் இவன்' படத்தில் நடனம் உள்பட பல கலைகளில் சிறந்து விளங்கும் எளிய கிராமத்து மனிதனாக மிக வித்தியாசமான சவாலான வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் விஷால். அந்தப் படத்தில் முதல் பாடலில் சேலை கட்டிக்கொண்டு பெண் வேடத்தில் முழுப் பாடலிலும் அதிரடி நடனமாடியிருப்பார். அதே படத்தில் பரதநாட்டியக் கலைஞர் போல் நவரசங்களையும் முகத்தில் வெளிப்படுத்தும் காட்சியில் கதை மாந்தர்களை மட்டுமல்ல திரைக்கு வெளியே பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தப் படம் வெற்றிபெறவில்லை என்றாலும் விஷாலால் உணர்வுபூர்வமாகப் பல பாவங்களை வெளிப்படுத்தியும் நடிக்க முடியும் என்பதை வெளிப்படுத்திய வகையில் முக்கியத்துவம் பெற்றது.

இயக்குநர் சுசீந்திரனின் 'பாண்டியநாடு' படத்தைத் தயாரித்து நாயகனாக நடித்தார் விஷால். 2013 தீபாவளிக்கு வெளியான அந்தப் படம் வணிக வெற்றியை மட்டுமல்லாமல் தரமான படம் என்று விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தின் முதல் பாதியில் அச்சம் மிக்க அப்பாவி இளைஞனாக பதற்றமடைந்தால் பேசும்போது திக்குபவராக மிகையின்றி நடித்திருந்தார் விஷால். 'சண்டக்கோழி'க்குப் பிறகு இந்தப் படம் விஷாலின் திரைவாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.

'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தின் இயக்குநர் திருவின் 'சமர்', 'நான் சிகப்பு மனிதன்' என விஷால் நடித்த இரண்டு படங்களும் மாறுமட்ட கதையமைப்பையும் சுவாரஸ்யமான திரைக்கதையையும் கொண்டிருந்தன. ஆனால் இரண்டு படங்களும் வணிக வெற்றியைப் பெறவில்லை.

தொடர்ந்து சுந்தர்.சியின் 'ஆம்பள', ஹரியின் 'பூஜை' என விஷால் ஆக்‌ஷன் படங்களில் நடித்தார். இயக்குநர் முத்தையாவின் 'மருது' படத்தில் கிராமத்து இளைஞனாக முழுக்க முழுக்க வேட்டி சட்டையில் வலம் வந்தார். இந்தப் படத்தில் ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல் என அனைத்து ஏரியாவிலும் சிறப்பாகப் பங்களித்திருந்தார்.

தமிழில் ஷெர்லாக் ஹோம்ஸ்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த 'துப்பறிவாளன்' ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியிலான துப்பறியும் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் விஷால். அந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றதைத் தாண்டி விஷாலின் திரைவாழ்வில் இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்தன. குறிப்பாக உணவக சண்டைக் காட்சியில் இறுதி சண்டைக் காட்சியும் தமிழ் சினிமா வரலாற்றில் ஆகச் சிறந்த வகையில் வடிவமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகளாகத் திகழ்கின்றன.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் 'இரும்புத்திரை' படத்தில் விஷால் நாயகனாக நடித்தார். இணையவழி நிதி மோசடிக் குற்றங்களை மையமாகக் கொண்ட இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியையும் விமர்சகர்களின் பரவலான பாராட்டையும் குவித்தது. ஆக்‌ஷன், காதல், சென்டிமென்ட் என இந்தப் படத்திலும் விஷாலின் பன்முக நடிப்புத் திறமை வெளிப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு 'வில்லன்' என்னும் மலையாளப் படத்தில் மோகன் லாலுடன் நடித்திருந்தார் விஷால். தெலுங்கில் வெற்றிபெற்ற 'டெம்பர்' படத்தின் மறு ஆக்கமான 'அயோக்யா' படத்தில் எதிர்மறைத்தன்மை நிரம்பிய நாயகனாக மாறுபட்ட நடிப்பைத் தந்திருந்தார்.

நடிப்பைத் தாண்டிய பரிமாணங்கள்

'பாண்டியநாடு' படத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர் தொடர்ந்து தன்னுடைய பெரும்பாலான படங்களைத் தயாரித்துவருகிறார். மேலும், தற்போது உருவாக்கத்தில் இருக்கும் 'துப்பறிவாளன் 2' படத்தின் மூலம் இயக்குநராகவும் பரிணமிக்க இருக்கிறார்.

திரைக்கு வெளியே வெற்றிகள்

திரைப்படத் துறையில் திரைப்படங்களுக்குள்ளான பங்களிப்பைத் தாண்டி திரைப்படங்களுக்கு வெளியே மிகப் பெரிய பங்களிப்புகளைத் தொடர்ந்து நிகழ்த்தியும் வருகிறார் விஷால். புதிய திரைப்படங்களின் போலி டிவிடிக்களைப் பறிமுதல் செய்து குற்றவாளிகளைக் காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை நேரடியாகக் களமிறங்கிச் செய்திருக்கிறார். தற்போது அதன் புதிய வடிவமான தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கும் பணிகளிலும் முதன்மைப் பங்கு வகித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முறைகேடுகளைக் கேள்வி எழுப்பத் தொடங்கி ஏற்கெனவே இருந்த தலைமையை எதிர்த்து புதிய அணியை உருவாக்கி சங்கத் தேர்தலில் வெற்றிபெற்று தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளர் ஆனார். அதோடு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வென்று அதன் தலைவரானார். நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டிடம் கட்டுவதைத் தனது வாழ்நாள் லட்சியங்களில் ஒன்றாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இவருடைய தலைமையில் வாய்ப்புகளை இழந்த நாடக நடிகர்கள், வறுமையில் வாடும் சினிமா துணை நடிகர்கள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது வாழ்வாதார ஏற்பாடுகளைச் செய்து தருவது ஆகிய பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்படி தமிழ் சினிமாவில் கடந்த 16 ஆண்டுகளில் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக உருவாகி பன்முக நடிப்புத் திறனை வெளிப்படுத்தி முன்னணி நட்சத்திர அந்தஸ்தை எட்டிப் பிடித்து தரமான திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு இயக்குநராகவும் பணியாற்றிவரும் விஷால் திரைப்படத் துறை எதிர்கொண்டிருக்கும் நெடுங்காலப் பிரச்சினைகளைக் களைய அயராமல் உழைத்து வருகிறார். மென்மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் நிகழ்த்த இந்தப் பிறந்த நாளில் விஷாலை மனதார வாழ்த்துவோம்.

SCROLL FOR NEXT