தமிழ் சினிமா

சினிமா படப்பிடிப்புக்கும் அனுமதி தேவை: தமிழக முதல்வருக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சினிமா படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்குமாறு தமிழக முதல்வருக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து சினிமா படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தினசரித் தொழிலாளர்கள் பலரும் கஷ்டத்துக்கு ஆளானார்கள். அவர்களின் துயர் துடைக்க நிவாரண உதவிகள் பெற்று வழங்கி வருகிறது பெப்சி.

சின்னத்திரை படப்பிடிப்பு, படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிவிட்டது. வெள்ளித்திரை படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்குமாறு தமிழக அரசை பல்வேறு சங்கங்கள், பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது பெப்சி அமைப்பு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விடுத்துள்ள அறிக்கை:

"இந்தக் கரோனா லாக்டவுன்‌ வேலை நிறுத்தத்தால்‌ திரைப்படத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,‌ அவர்கள்‌ துயர் துடைக்கும்‌ விதமாக நடிகர்‌ சிவகுமார்‌, சூர்யா, கார்த்தி‌ ரூ. 80 லட்சம்‌ நிதியுதவி வழங்கியுள்ளார்‌கள். ஏற்கெனவே இவர்கள்‌ சார்பில்‌ மார்ச்‌ மாதத்தில்‌ ரூ 10 லட்சம்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்திற்கு வழங்கப்பட்டது. ஆக மொத்தம்‌ ரூ 90 லட்சத்தை தொழிலாளர்களுக்கு வழங்கிய சிவகுமார்‌, சூர்யா, கார்த்தி‌ ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

இந்த 80 லட்ச ரூபாயையும்‌ 20,000 தொழிலாளர்களுக்கு நேரடியாக தலா ரூ 400/- வழங்குவதென முடிவு செய்துள்ளோம்‌. இந்தப்‌ பணம்‌ வரும்‌ திங்கட்கிழமை முதல்‌ சங்கங்கள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌.

ஏற்கெனவே 6 மாதத்திற்கு மேலாக தமிழ்த்‌ திரைப்படத்துறையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்‌ பட்டினியால்‌ வாடிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. நிபந்தனைகளுடன்‌ பணியாற்றுகிறோம்‌. எங்களுக்குப் படப்பிடிப்பிற்கான அனுமதியைத் தாருங்கள் என அரசிடம்‌ வேண்டுகோள்‌ விடுத்துள்ளோம்‌.

எங்கள் வேண்டுகோளை ஏற்று முதலில் இறுதிக்கட்டப் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்‌கியது. அரசு விதித்த அனைத்து நிபந்தனைகளையும்‌ முழுமையாகப் பின்பற்றி, பணியாற்றி வருகிறோம்‌ என்பதை அரசுக்குத் தெரிவிப்பதோடு, தமிழக முதல்வர்‌ படப்பிடிப்பிற்கு அனுமதியளிக்குமாறு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள்‌ சம்மேளனம்‌ சார்பாக கேட்டுக் கொள்கிறோம்‌".

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT