'ட்ரான்ஸ்' இயக்குநர் அன்வர் ரஷீத் தமிழில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து இயக்கவுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.
'கேரளா கஃபே', 'உஸ்தாத் ஹோட்டல்', '5 சுந்தரிகள்', 'ட்ரான்ஸ்' உள்ளிட்ட படங்களின் மூலம் மலையாளத்தில் முக்கியமான இயக்குநராக வலம் வருபவர் அன்வர் ரஷீத். '5 சுந்தரிகள்' படத்தில் 5 கதைகளில் ஒரு கதையை மட்டுமே அன்வர் ரஷீத் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக மட்டுமன்றி 'பெங்களூர் டேஸ்', 'பிரேமம்', 'பறவா' மற்றும் 'ட்ரான்ஸ்' ஆகிய படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
தற்போது முதன்முறையாக தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார் அன்வர் ரஷீத். அவர் தயாரித்து இயக்கவுள்ள படத்தின் நாயகனாக அர்ஜுன் தாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'கைதி' படத்தில் வில்லனாக நடித்த அவருடைய நடிப்பு பிடித்திருந்ததால் அவருக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார் அன்வர் ரஷீத்.
இந்தப் படத்தின் கதையை 'அஞ்சம் பாத்திரா' இயக்குநரான மிதுன் மானுவேல் எழுதியிருக்கிறார். முழுக்க கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.