தமிழ் சினிமாவில் 1980-களின் பிற்பகுதியில் தொடங்கி 90களிலும் புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளிலும் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்து தமிழ் சினிமா இசைப் பாரம்பரியத்தில் தனக்கென்று ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கும் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 23).
1987-ல் ராபர்ட்-ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான 'சின்னப்பூவே மெல்லப் பேசு' திரைப்படத்தின் மூலம் இசைமையாப்பாளராக தமிழ் சினிமாத் துறையிலும் ரசிகர்கள் மனங்களிலும் முதல் தடம் பதித்தார் ராஜ்குமார். அந்தப் படத்தில் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றதோடு படத்தின் வெற்றிக்கும் இசையின் வெற்றி முக்கிய பங்காற்றியது. அதன் பிறகு 'ரயிலுக்கு நேரமாச்சு', 'மனசுக்குள் மத்தாப்பு' உள்ளிட்ட படங்களில் தன் பாடல்களின் மூலம் கவனம் ஈர்த்த ராஜ்குமாருக்கு 1990-ன் ஆண்டு முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய இரண்டு சாதனை இயக்குநர்களின் அறிமுகப் படங்களுக்கு ராஜ்குமார் இசையமைத்தார்.
விக்ரமன் அறிமுகமான 'புது வசந்தம்' திரைப்படத்துக்கு அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஆல் கிளாஸ் ஹிட்டடித்தன. 'பாட்டு ஒன்னு நா பாடட்டுமா பால் நிலவக் கேட்டு', 'ஆயிரம் திருநாள்', 'போடு தாளம் போடு' ஆகிய பாடல்களை இன்று கேட்டாலும் புத்துணர்ச்சியைப் பெற முடியும். இசைத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் கதையாக அமைந்திருந்த அந்தப் படத்துக்கு முழுக்க முழுக்க உயிரோட்டமும் உணர்வெழுச்சியும் மிக்க இனிமையான இசையை அளித்திருந்தார் ராஜ்குமார்.
இந்தத் திரைப்படத்துக்குப் பிறகு விக்ரமனும் ராஜ்குமாரும் இணைந்து 'பூவே உனக்காக', 'சூர்யவம்சம்', 'வானத்தைப் போல' என சூப்பர் ஹிட் பாடல்கள் நிரம்பிய பல வெற்றிப் படங்களைக் கொடுத்தனர். உண்மையில் 'சூப்பர் ஹிட் பாடல்கள் நிரம்பிய' என்று ஒற்றை வரியில் கடக்கக்கூடிய வெற்றி அல்ல அது. 'பூவே உனக்காக'வில் (1996) 'ஆனந்தம் ஆனந்தம் பாடும்' 'சூர்ய வம்சம்'(1997) படத்தில் 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' போன்ற பாடல்கள் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் திரை இசை ரசிகர்களையும் முழுமையாக ஆட்கொண்டிருந்தன என்று சொன்னால் மிகையில்லை. இந்தப் படங்களில் இடம்பெற்ற பல பாடல்களைத் தலைமுறைகள் கடந்து இன்றைய இளைஞர்களாலும் ரசிக்கப்படுகின்றன.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முதல் படமான 'புரியாத புதிர்' பரபரப்பான த்ரில்லர் கதை. அதற்குப் பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையில் த்ரில் கூட்டி கவனிக்க வைத்தார். ரவிக்குமாரின் 'பிஸ்தா திரைப்படத்திலும் வெற்றிப் பாடல்களைக் கொடுத்தார்.
1998இல் வெளியான 'மறுமலர்ச்சி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு' என்னும் பாடல் தமிழ் சினிமாவின் தலை சிறந்த கிராமத்துக் காதல் பாடல்களின் பட்டியலில் இடம்பெறத்தக்கது. அனைத்து சென்டர்களிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் பாடல் பெண்களின் மனதுக்கு மிக நெருக்கமான பாடல்களில் ஒன்று.
விக்ரமன், ரவிக்குமாரைத் தவிர ராஜ்குமாருடன் அதிக படங்களில் பணியாற்றிப் பல வெற்றிப் பாடல்களைப் பெற்றவர் இயக்குநர் எழில். 'துள்ளாத மனமும் துள்ளும்', 'பெண்ணின் மனதைத் தொட்டு' என எழில் இயக்கிய படங்களில் காலத்தால் அழிக்க முடியாத வெற்றிப் பாடல்கள் அமைந்தன.
ராமநாராயணன், டி.பி.கஜேந்திரன் போன்ற மூத்த இயக்குநர்களின் படங்களிலும் கே..ஷாஜகான், கமல், சூர்யபிரகாஷ் போன்ற புதிய அல்லது அதிக கவனம்பெறாத இயக்குநர்களின் படங்களிலும் வெற்றிப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். இவற்றில் ஷாஜகான் இயக்கிய 'புன்னகை தேசம்' படத்தில் அனைத்துப் பாடல்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றவை. இயக்குநர் லிங்குசாமியின் அறிமுகப் படமான 'ஆனந்தம்' படத்துக்கு ராஜ்குமார் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் ஆனந்தத்தை அள்ளிக்கொடுத்தவை. 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்' பாடல் பல்லாங்குழி என்றால் என்னவென்றே தெரியாத தலைமுறைக்கும் பிடித்த பாடலானது.
நடிகர்களைப் பொறுத்தவரை 90களில் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ஆகியோரின் படங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் எஸ்.ஏ.ராஜ்குமார். இப்போது முதன்மை நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் விஜய், அஜித் இருவருக்கும் அவர்களது ஆரம்ப காலத்தில் முக்கியமான வெற்றிப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். விஜய்க்கு 'பூவே உனக்காக', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'ப்ரியமானவளே', 'வசீகரா' ஆகிய படங்களில் மிகச் சிறப்பான பாடல்களைத் தந்தவர். இவற்றில் முதல் இரண்டு படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்று விஜய்யை ஒரு கதாநாயகனாக நடிகராகவும் நட்சத்திர நடிகராகவும் நிலை நிறுத்தியவை. அஜித்துக்கும் 'அவள் வருவாளா', 'நீ வருவாய் என', 'ராஜா' ஆகிய படங்களில் மறக்க முடியாத வெற்றிப் பாடல்களைக் கொடுத்தார்.
தெலுங்கு, கன்னடம். மலையாளத் திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழ். தெலுங்கு, கன்னட மொழிகளில் தலா ஒரு ஃபிலிம்ஃபேர் விருதையும் 'சூர்ய வம்சம்' திரைப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருதையும் வென்றுள்ளார்.
குறைந்த பட்ஜெட் படங்களுக்கும் அறிமுக இயக்குநர்கள், அதிக கவனம் பெறாத நடிகர்களின் படங்களுக்கும் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையும் பாடல்களும் முக்கிய முகவரியாக திரையரங்குக்கு ரசிகர்களை ஈர்க்கும் சக்தியாக அமைந்திருக்கின்றன. டி.பி.கஜேந்திரனின் 'பட்ஜெட் பத்மநாபன்' என்ற சிறு முதலீட்டு வெற்றிப் படத்துக்கும் அவர்தான் இசையமைத்தார் என்பது சுவாரஸ்யமானது. அதே போல் அவர் இசையமைத்த பல காதல் மெலடி பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. மற்ற வகைமாதிரியைச் சார்ந்த பாடல்களும் அந்தக் காலகட்டத்தில் ரசிகர்களின் ரசனைக்கும் தயாரிப்பாளர்களின் வெற்றிக்கும் கதையின் தேவைக்கும் ஏற்ற பாடல்களைக் கொடுத்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'மறுமலர்ச்சி 2' திரைப்படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் திரை இசைத் துறையில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவும் அவருடைய பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கவும் அவரை மனதார வாழ்த்துவோம்.