தமிழ் சினிமா

'மாஸ்டர்' அப்டேட்: ரசிகர்களை குஷிப்படுத்த ப்ளூப்பர்ஸ்

செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்தில் ரசிகர்களைக் குஷிப்படுத்த ப்ளூப்பர்ஸ் இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடலாம், அதற்கு கரோனா அச்சுறுத்தல் எல்லாம் குறைந்து சகஜநிலை திரும்பும் எனப் படக்குழு காத்திருக்கிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே விஜய்யுடன் நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் கைப்பற்றி இருக்கிறார்.

'மாஸ்டர்' படத்தில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக ப்ளூப்பர்ஸ் சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒட்டுமொத்த படத்தின் படப்பிடிப்பு தளம், தளத்தில் நடைபெற்ற சுவாரசியங்கள், நடிகர்களின் கிண்டல்கள் என அனைத்தையும் காட்சிப்படுத்தியுள்ளனர். இதனை ப்ளூப்பர்ஸ் பாணியில் படத்தின் இறுதியில் இணைக்கவுள்ளார்கள்.

இது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும் என்றும், இதில் நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய உடையிலேயே இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் இருவரும் அதே உடையில் சென்று கலாட்டா செய்வதும் இடம்பெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தான் இப்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இதில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவில்லை என்றும், ப்ளூப்பர்ஸ் காட்சிகளுக்காகச் செய்த கலாட்டாவின் போது எடுக்கப்பட்டது என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT