படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வருக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து சினிமா படப்பிடிப்புகள் இந்தியா முழுக்கவே ரத்து செய்யப்பட்டது. மேலும் திரையரங்குகளும் மூடப்பட்டதால் தயாரிப்பாளர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. தற்போது கரோனா ஊரடங்கிலிருந்து தளர்வுகளை அறிவித்து வருகிறது மத்திய அரசு.
இதில் இன்று (ஆகஸ்ட் 23) படப்பிடிப்பு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. மேலும், படப்பிடிப்பு தளத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளது. இதனால், விரைவில் தமிழக அரசும் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு விரைவாக படப்பிடிப்புக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும், சுமார் 80 படங்கள் வரை படப்பிடிப்பை முடிக்கக் காத்திருப்பதாகவும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தமிழக முதல்வருக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் சேரன் கூறியிருப்பதாவது:
"திரைத்துறை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதையும், 70% சிறு படத்தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு படப்பிடிப்பின் அனுமதிக்கான செலவுகளையும், வரிச்சலுகைகளையும் நிலைமை சீராகும் வரை முற்றிலுமாக நீக்கித்தருமாறு வேண்டுகிறேன்."
இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட்டுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இருவரின் ட்விட்டர் கணக்கையும் குறிப்பிட்டுள்ளார்.