டாப்ஸி நடிக்கவுள்ள புதிய படத்தில் கவுரவக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது.
இந்தித் திரையுலகில் நாயகியை முன்னிலைப்படுத்தி வரும் கதாபாத்திரங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. அவர் தேர்வு செய்யும் கதைகளும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதனால், தென்னிந்தியத் திரையுலகில் மிக முக்கியமான படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி.
தமிழில் ஜெயம் ரவியுடன் 'ஜன கண மன' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தினை தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ள இவர், நடிகர் மற்றும் இயக்குநரான சுந்தர்ராஜனின் மகன் ஆவார். டாப்ஸி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காகப் படக்குழுவினர் அனைவரையும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து அழைத்துச் சென்றுள்ளது படக்குழு. கரோனா அச்சுறுத்தலால் இந்த முடிவை எடுத்துள்ளது. ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.