தமிழ் சினிமா

நடிகர் கிஷோர் பிறந்தநாள் ஸ்பெஷல்: எல்லாக் கதாபாத்திரங்களிலும் அசத்தும் நடிகர் 

ச.கோபாலகிருஷ்ணன்

சில திரைப்படங்களில் கதாநாயகன், வில்லன் ஆகிய இரண்டு பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டி மற்ற கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அந்தக் கதாபாத்திரம் வந்து செல்லும் சில காட்சிகளே அந்தப் படத்தின் ஆகச் சிறந்த காட்சிகளாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட ஒன்றுதான் 2007-ல் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டும் வணிக வெற்றியையும் பெற்ற 'பொல்லாதவன்' படத்தின் செல்வம் கதாபாத்திரம்.

இந்த செல்வம் ஒரு ரவுடி, கடத்தல், கொலை, அடிதடி ஆகியவற்றைச் செய்யும் கூட்டத்தின் தலைவன். ஆனால் இவனுக்கென்று சில கொள்கைகள் உண்டு. தம்மிடம் ஆள்பலமும் ஆயுதங்களும் அதிகாரமும் இருக்கின்றன என்பதற்காக யாரையும் தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. 'ஃபப்ளிக்'கை (பொதுமக்கள்) தேவையில்லாமல் பகைத்துக்கொள்ளக் கூடாது. கொல்லப்பட வேண்டிய எதிரி ஆனாலும் அவன் 'ஃபேமிலி'யுடன் (குடும்பம்) இருக்கும்போது அவனைத் தாக்கக் கூடாது. அடிதடியில் ஈடுபடும் ரவுடி என்றாலும் தேவையில்லாமல் யார் வம்புதும்புக்கும் போகக் கூடாது, ஆள்பலம் இருக்கிறது என்பதற்காக வெட்டி வீராப்பு காட்டக் கூடாது என்ற நிதானத்துடன் ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவனை இதற்கு முன் திரையில் பார்த்திருக்கிறோமா?

ஆனால் உண்மையில் திட்டமிட்டு தொழில்ரீதியாகக் குற்றங்களைச் செய்பவர்கள் இப்படிப்பட்ட நிதானத்துடனும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் முதுர்ச்சியுடனும்தான் பெரும்பாலும் இருப்பார்கள். ஆனால் இவர்களைத் திரையில் பார்த்திராத ரசிகர்களுக்கு உடனடியாக 'செல்வம்' கதாபாத்திரம்' மனதுக்கு நெருக்கமாகிவிட்டது. செல்வம் கதாபாத்திரம் அவ்வளவு வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம் அதன் தனித்தன்மை மட்டுமல்ல. அதில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கிஷோரின் அசாத்திய நடிப்புத் திறமையும்தான்.

முதல் படத்திலேயே ரசிகர்கள், விமர்சகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட கிஷோர் அதற்குப் பிறகு நடித்த படங்கள் மூலமாகவும் அந்த நன்மதிப்பைத் தக்க வைத்திருக்கிறார். நல்லவர், தீயவர், இரண்டும் கலந்த சராசரி மனிதர் எனத்தான் ஏற்று நடிக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் அணி சேர்க்கும் மிகச் சில நடிகர்களில் ஒருவரான கிஷோர் இன்று (ஆகஸ்ட் 14) தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பெங்களூரில் கல்லூரியில் படிக்கும்போதே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர் கிஷோர். அதோடு கன்னட இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2004-ல் வெளியான 'காந்தி' (Kanti) என்கிற கன்னடப் படத்தின் மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகருக்கான கர்நாடக அரசின் மாநில விருதை வென்றார்.

2013-ல் 'என்.ஹெச்4' திரைப்படம் வெளியானது. வெற்றிமாறன் தயாரிப்பில் அவருடைய நண்பரும் துணை இயக்குநருமான மணிமாறன் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இந்தப் படத்தைத் தான் 'தேசிய நெடுஞ்சாலை' என்ற தலைப்பில் தன் முதல் திரைப்படமாக இயக்கத் திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். அந்தப் படத்தில் தப்பிச் சென்ற காதலர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க கன்னடமும் தமிழும் பேசத் தெரிந்த ஒரு நடிகரைத் தேடியபோது கிஷோரை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் வெற்றிமாறனின் முதல் படமாக 'பொல்லாதவன்' கதை தேர்வாக அதில் செல்வம் கதாபாத்திரம் கிஷோருக்கு வழங்கப்பட்டது. கிஷோர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்தது இப்படித்தான் அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்', 'விசாரணை', 'வட சென்னை' படங்களிலும் முக்கியமான வேடங்களில் கிஷோர் நடித்திருக்கிறார். தலைசிறந்த இயக்குநருக்கும் மிகச் சிறந்த நடிகருக்குமான பரஸ்பர மரியாதையின் விளைவுதான் இது.

ஏற்கெனவே கன்னடத்தில் முன்னணி நடிகராக இருந்த கிஷோர் 'பொல்லாதவன்' வெற்றிக்குப் பிறகு தமிழ்., தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பிசியான நடிகராகிவிட்டார் 2008-ல் வெளியான 'ஜெயம் கொண்டான்' படத்தில் முரட்டுத்தனமான வில்லனாக நடித்திருந்தார். அதே ஆண்டு 'வெண்ணிலா கபடிக் குழு' படத்தில் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட, கபடி பயிற்சியாளராக நடித்திருந்தார். இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டன. எந்த ஒரு இமேஜுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் தொடர்ந்து பல வகையான படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். அவற்றில் பெரும்பாலானவை ரசிக்கத்தக்கவையாக அமைகின்றன. சில மோசமான படங்களில்கூட கிஷோரின் நடிப்பு கவனித்துப் பாராட்டத்தக்கதாக இருந்தது.

2013-ல் தமிழ்-கன்னடம் இரு மொழிப் படமாக வெளியான 'வன யுத்தம்' திரைப்படத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனாக நடித்து அனைவருடைய பாராட்டையும் பெற்றார். அதே ஆண்டு ஜி.என்.குமரவேல் இயக்கிய 'ஹரிதாஸ்' திரைப்படத்தில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தகப்பனும் துணிவு மிக்க காவல்துறை அதிகாரியுமான பன்முகத்தன்மை வாய்ந்த முதன்மைக் கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக ரசித்திருந்தார். ஆட்டிஸம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகப் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தப் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக கிஷோரின் நடிப்பும் அமைந்திருந்தது.

2015-ல் 'தூங்காவனம்' படத்தில் மெயின் வில்லனாக கமல் ஹாசனுடன் நடித்தார். அதேபோல் ரஜினியுடன் 'கபாலி', மோகன்லாலுடன் 'புலி முருகன்', அஜித்துடன் 'ஆரம்பம்' என நட்சத்திர நடிகர்களின் படங்களில் தன் தனித்துவமான நடிப்பு முத்திரையைப் பதித்திருக்கிறார்.

ஒரு நடிகராக எந்தவகையான கதாபாத்திரத்திலும் இயல்பாகப் பொருந்தவும் மிகையின்றி நடிக்கவும் கிஷோருக்கு இணையான ஆட்கள் தென்னிந்திய சினிமாவிலேயே வெகு குறைவு. நகர்ப்புற நவீனர் என்றாலும் கிராமப்புற எளியவர் என்றாலும் அவருடைய தோற்றமும் நடிப்பும் கச்சிதமாகப் பொருந்திவிடும். உடல்மொழி, வசன உச்சரிப்பு, பார்வை என அனைத்திலும் கதாபாத்திரமாகவே உருமாறிவிடுவார். ஆனால் அவருடைய முழுத் திறமையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அவருக்கு இன்னும் பல நல்ல புதுமையான கதாபாத்திரங்களை வடிவமைப்பது படைப்பாளிகள் கையில்தான் இருக்கிறது.

அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு நடிகராக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் கிஷோர் இன்னும் பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து திரை வாழ்விலும் ரசிகர்களின் மனங்களிலும் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று இந்தப் பிறந்தநாளில் அவரை மனமார வாழ்த்துவோம்.

SCROLL FOR NEXT