தனது படங்களில் 90-களின் பாடல்கள், இசையை உபயோகப்படுத்துவது ஏன் என்பதற்கான காரணத்தை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா, ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும், சாம் சி.எஸ். இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருந்தனர்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே, இந்தப் படம் டொரண்டோ திரைப்பட விழாவில் நேற்று (ஆகஸ்ட் 12) திரையிடப்பட்டது. இந்த விழாவுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டியொன்றை அளித்துள்ளார்.
அதில் 'கைதி' படத்தில் உபயோகப்படுத்தும் பழைய பாடல்கள் குறித்து பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"நான் படம் பார்க்க, பாடல்கள் கேட்க ஆரம்பித்தது 90-களில் வளரும் போதுதான். அந்த நாட்களை நினைவூட்டும் எந்தப் பாடல் மனதில் தோன்றினாலும் அதை நான் கதையில் பயன்படுத்துவேன். இப்போது எடுத்துள்ள 'மாஸ்டர்' உட்பட எனது மூன்று படங்களில் அப்படி 90களின் இசையைப் பயன்படுத்தியுள்ளேன். திரைக்கதை எழுதும்போதே என்னப் பாடல் வர வேண்டும் என்பதைக் குறிப்பிடுவேன். 'கைதி' திரைக்கதையிலும் அப்படித்தான். ஏனென்றால் அதற்காக முறையான உரிமம் பெற வேண்டும் என்பதால்.
அன்பு கதாபாத்திரம் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது ஆசை அதிகம் வெச்சு பாடல் ஒலிக்கும். அதற்கான உரிமத்தை படப்பிடிப்புக்கு முன்பே பெற்றுவிட்டோம். ஏனென்றால் அந்தக் காட்சியை அந்தப் பாடலுக்கு ஏற்றார் போலத்தான் அமைத்தோம். அந்தப் பாடலை தளத்தில் ஒலிக்க விட்டு அதற்கு ஏற்றார் போலத்தான் சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டன. பாடலின் மெட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு ஷாட்டும் எடுக்கப்பட்டது"
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.