ரவுடியை நாயகனாக்குவதும் நாயகி, அந்த ரவுடியை உயிருக்கு உயிராகக் காதலிப்பதும் தமிழ் சினிமாவில் ஒன்றும் புதிதில்லை. அநேகமாக, இப்படியான விஷயத்தை வைத்து, அதேசமயம் ஹெவி மெசேஜ் சொன்ன படமாக ‘புதியபாதை’ போட்டுக் கொடுத்தது ‘புதிய பாதை’ படமாகத்தான் இருக்கும். இதன் பின்னர், அங்கொன்றும் இங்கொன்றுமாக, ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை என்று ஹீரோ ரவுடிக்கும் நாயகிக்குமான காதலைச் சொன்ன படங்கள் வந்தாலும் இந்தப் படத்துக்குப் பிறகு அந்த சப்ஜெக்ட்... வெற்றி சப்ஜெக்டாக அமைந்தது. அதையடுத்து ஏராளமான படங்கள் வரத்தொடங்கின. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ரவுடியும் காதலுமான சப்ஜெக்ட் படம்... ‘அமர்க்களம்.’
பாலசந்தரின் பட்டறையில் இருந்து பட்டை தீட்டப்பட்ட இயக்குநர் சரணின் முதல் படம் ‘காதல் மன்னன்’. வெங்கடேஸ்வராலயம் எனும் ஆந்திரத் திரையுலக படக்கம்பெனி தயாரித்தது. இந்த நிறுவனத்துக்குப் படம் செய்வோம் என்று சொன்னவர்... அஜித். 93ம் ஆண்டு, ‘பிரேம புஸ்தகம்’ என்கிற தெலுங்குப் படத்தை இந்த நிறுவனம் தயாரித்தது. பல சோதனைகளுக்குப் பிறகு, இந்தப் படத்தை எடுத்து முடிக்கவே இரண்டரை ஆண்டுகளானது. 93ம் ஆண்டுதான் படம் வெளியானது. இந்தப் படம் வருவதற்குள் தமிழில் சில மாதங்களுக்கு முன்னதாகவே ‘அமராவதி’ வெளியாகியிருந்தது.
தன்னை முதன் முதலில் நடிக்க வைத்த அந்த நிறுவனத்துக்கு 98ம் ஆண்டு ஒருபடம் நடித்துக் கொடுத்தார் அஜித். அதுதான் ‘காதல் மன்னன்’. மீண்டும் அதே நிறுவனம்... அதே இயக்குநர் கூட்டணியில் அஜித் நடிக்க உருவானதுதான் ‘அமர்க்களம்’. அஜித் - சரண் கூட்டணியில் உருவான ‘அமர்க்களம்’, அஜித்துக்கு 25வது படம். ஆக, அஜித்தின் முதல் படமாக புக் செய்த ‘பிரேம புஸ்தகம்’ 25வது படமான ‘அமர்க்களம்... இரண்டுமே ஒரே தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்தது.
அமர்க்களம். கொல்கத்தா தாதா ரகுவரன். ஆனால் அவரின் மனைவிக்கு இவரின் நடவடிக்கைகள் தெரியாது. நிறைமாத கர்ப்பிணியாக ராதிகாவை அழைத்துக் கொண்டு, சென்னையில் உள்ள போலீஸ் நண்பர் நாசர் வீட்டுக்கு வருவார். அங்கே, மனைவியின் எதிரிலேயே கைது செய்யப்படுவார். கணவர் யார் என்பதைப் புரிந்துகொண்ட ராதிகா, அவரைப் புறக்கணிக்கிறார்; பிரிகிறார்.
நாசர் வீட்டில் எல்லோரும் போலீஸ்தான். மகள் மோகனா இசைக்கல்லூரி மாணவி. அவர்தான் ஷாலினி. சென்னையில் உள்ள தியேட்டரே கதியென்று கிடைக்கும் வாசுதான் அஜித். அங்கிருந்தபடி, அடிதடி, வெட்டுகுத்து, கட்டப்பஞ்சாயத்து என்று ரவுடியிஸம் பண்ணிக்கொண்டிருக்கிறார். ‘அண்ணாமலை’ படப்பெட்டி சம்பந்தமாக ஷாலினிக்கும் அஜித்துக்கும் ஒரு கலாட்டா. அதன் பின்னர், ரகுவரன், சிறையில் இருந்து வருகிறார். தியேட்டர் முதலாளி வினுசக்ரவர்த்திக்கும் ரகுவரனுக்கும் ஆரம்பகாலப் பழக்கம். ஆகவே, ரகுவரனும் தியேட்டரில் தங்குகிறார்.
மனைவிக்கு முன்னே கைது செய்து, மனைவியைப் பிரியக் காரணமாக இருந்த நாசரைப்பழிவாங்க, ஷாலினியைக் கடத்தச் சொல்லி, அஜித்திடம் சொல்கிறார் ரகுவரன். அவருடைய மகள்தான் ஷாலினி என்று அவருக்குத் தெரியாது. அஜித்தும் கடத்திக் கொண்டு, செஞ்சிக் கோட்டையில் மூன்று நாட்கள் வைத்திருந்து கொண்டுவந்துவிடுவார்.
அங்கே, அஜித்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்வார். இன்னொரு முகத்தைத் தெரிந்துகொள்வார். அவர் மீது இருந்த கோபமெல்லாம் போய், அன்பு அதிகரிக்கும். அந்த அன்பு காதலாகும். பிறகு, ‘அவளை காதலிக்கும் படி நடி’ என்பார். அஜித்தும் நடிப்பார். அங்கே, ஷாலினி காதலிக்கத் தொடங்குவார். அஜித் மெல்ல மெல்ல மாறுவார்.
இந்த நிலையில், ‘உம் பொண்ணு ஒரு ரவுடியை லவ் பண்றா’ என்று நாசரிடம் ரகுவரன் சொல்ல, அதிர்ந்து போனவர், அஜித்திடம் ‘இனிமே அந்தப் பொண்ணைப் பாக்காதே’ என்பார். துடித்துப் போவார் அஜித். முடியாது என எதிர்ப்பார். நான் சொல்லித்தான் அவன் நடிச்சான் என்று உண்மையை ஷாலினியிடம் சொல்லிவிடுவார் ரகுவரன்.
இதில் ஷாலினி வெறுப்பார். அஜித்தோ வாழ்க்கையையே வெறுப்பார். இன்னொரு ரவுடி கேங்ஸ்டரான பொன்னம்பலத்திடம் அடைக்கலமாவார். பொன்னம்பலத்திடம் சொல்லி, ‘அவனைப் போட்ரு’ என்பார் ரகுவரன். இந்தசமயத்தில், போலீஸும் ரவுடிகளை என்கவுண்ட்டர் செய்யும் முடிவுக்கு வந்திருக்கும். நடுவே, விஷயம் மொத்தத்தையும் அஜித் நண்பர்கள் ஷாலினியிடம் சொல்ல, பதறியடித்துக் கொண்டு என்கவுண்ட்டர் ஏரியாவுக்கு ஷாலினியும் ஆஜராவார். ரகுவரனும் வந்துவிடுவார். அத்தனை களேபர பரபரப்பின் இறுதியில், அஜித்தும் ஷாலினியும் இணைவார்கள்.
சரணுக்கு காதல் அழகாக வரும். கூடவே படத்துடன் இயைந்து காமெடியும் சரம்சரமாய் வரும். இந்தப் படத்திலும் அமர்க்களமாய் அவை பொருந்தியிருக்கின்றன. அதேபோல், ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு இடத்தை, ஒரு விஷயத்தை களமாக்கிக் கொள்வது சரண் ஸ்டைல். ‘காதல் மன்னனில்’ மேன்ஷன், மெஸ். இதில் சினிமா தியேட்டர்.
‘ஆசை’ நாயகன், சாக்லெட் பாய் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்த அஜித், ’உல்லாசம்’ படத்தில் துப்பாக்கி தூக்கினார். அந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. இந்தப் படத்தில் கத்தி கபடாவுடன் அதகளம் பண்ணியிருப்பார். எப்போதும் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டிருப்பது, காதலில் அசடு வழிவது, நடித்துவிட்டு, திரும்பும் போது, ஸ்டைலாக பட்டன்களைக் கழற்றிவிட்டுக் கொண்டு நடப்பது, ரகுவரனிடம் நேருக்கு நேர் கண்களில் நெருப்புக் கங்கு பறக்க மோதுவது, ஆவேசமும் ஆத்திரமும் வரும்போது மட்டும் திக்கித்திக்கிப் பேசுவது என படம் முழுவதும் அஜித் அமர்க்களப்படுத்தியிருப்பார்.
ஷாலினிக்கு சொல்லவா வேண்டும். குடும்பமே தாங்குவதில் பூரித்துப் போவது, இசையுடன் லயிப்பது, பார்வையற்ற சார்லியிடம் பரிவும் அன்பும் காட்டுவது, அஜித்தின் செயலில் அதிர்ந்து போவது, காதலில் உருகுவது, ரகுவரனிடம் எதிர்ப்பது, டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு மொத்த குடும்பத்துக்கும் பதிலளிப்பது, செஞ்சிக் கோட்டையில் அஜித்தின் மூச்சுமுட்டும் பாடலைக் கேட்டு திணறி திகைப்பது என படத்தில் அமர்க்களம் பண்ணியிருப்பார்.
கொல்கத்தா தாதா, மனைவியிடம் நேர்மை, போலீஸ் அதிகாரியின் மீது நம்பிக்கை, வினுசக்ரவர்த்தியிடம் கொஞ்சம் அன்பும் நிறைய அதிகாரமும் காட்டுகிற தோரணை, அஜித்திடம் மோதுவது, அதேசமயம் தன்னைப் போலவே நெருப்பு என உணருவது, நாசரிடம் உண்மையைச் சொல்லும் போது பந்தா காட்டி ஜெயித்ததைப் பறைசாற்றுவது, தன் மகள்தான் ஷாலினி என்று தெரியும் போது உடைந்துபோவது என படம் நெடுக மிரட்டி அமர்க்களம் பண்ணியிருப்பார்.
ராதிகா, வையாபுரி, தாமு, வினுசக்ரவர்த்தி, அம்பிகா, பூவிலங்கு மோகன், பொன்னம்பலம், ராம்ஜி, ரமேஷ் கண்ணா என எல்லோருமே கொடுத்த கேரக்டரை சிறப்புறச் செய்து அமர்க்களம் பண்ணியிருப்பார்கள்.
வெங்கடேஷின் ஒளிப்பதிவு நேர்த்தி ப்ளஸ் அமர்க்களம். சுரேஷ் அர்ஸின் எடிட்டிங் கச்சிதம் ப்ளஸ் அமர்க்களம். வைரமுத்துவின் பாடல்கள் எல்லாமே அமர்க்களம். படம் தொடங்கியதும் ’சொந்தக் குரலில் பாட ரொம்பநாளா ஆசை’ என்று ஷாலினியே பாடியிருப்பார். ’காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா’ என்ற பாட்டுக்கு ராகவா லாரன்ஸ் ஆடியிருப்பார். ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ என்ற மெல்லிசைப் பாடல், ‘சத்தமில்லாத தனிமை கேட்டேன்’ என்ற எஸ்.பி.பி.யின் குரலில் அமைந்த மிரட்டலான, வேதனையான, ஆவேசமான பாடல். இதை நடிகர் ராம்ஜி டான்ஸ் அமைத்திருப்பார். ‘மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு’ என்ற சோகமும் விரக்தியுமான பாடல். இந்தப் பாடலின் போது ஒரு நீலக்கோடு ஒன்று பிலிம்மில் எப்படி வந்தது என்றே தெரியவில்லை. முதல்நாள் பார்க்கும்போதே அப்படித்தானிருந்தது. எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கினார் பரத்வாஜ். கூடவே, பின்னணி இசையிலும் அமர்க்களப்படுத்தினார்.
தியேட்டர் களம் புதுசு. ஷாலினியின் அறையில் உள்ளது கலைநுட்ப வெளிப்பாடு. செஞ்சிக் கோட்டை பிரமாண்டம். ’அண்ணாமலை’ படக் காட்சி. ‘ஏக் துஜே கேலியே’ பட க்ளைமாக்ஸ் காட்சி. தியேட்டர் திரை மூட... இடைவேளை. க்ளைமாக்ஸில் ஷாலினியைத் தூக்கிக்கொண்டு, அடையார் ரோட்டில் அஜித் நடப்பதுடன் வணக்கம் என சரண், படம் நெடுக, ’டச்’களைக் கொடுத்திருப்பார். முக்கியமாக, ‘அமர்க்களம் FiX YOUR ENEMY' என்று டைட்டிலுடன் கேப்ஷனும் கொடுத்திருப்பார்.
‘காதல் மன்னன்’ படத்தை விட அதிக நாள் ஓடியது; வசூல் அள்ளியது; அமர்க்களம் பண்ணியது ‘அமர்க்களம்’. இயக்குநர் சரணுக்கு மிக முக்கிய வெற்றிப்படமாக அமைந்தது. ஷாலினிக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அஜித்தின் 25 வது படமாகவும் சாக்லெட் பாய் இமேஜையெல்லாம் ஒரு மாஸ் ஹீரோ களத்துக்கு நகர்த்தியது ‘அமர்க்களம்’.
99ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி வெளியானது ‘அமர்க்களம்’. படம் வெளியாகி, 21 ஆண்டுகளாகின்றன.
அல்டிமேட் ஸ்டார் எனும் பட்டம் கொடுத்து டைட்டில் போடப்பட்ட அமர்க்களம் மூலம், ஹீரோ அஜித்தும் ஹீரோயின் ஷாலினியும் நிஜவாழ்விலும் ஜோடியானார்கள்; வாழ்க்கைதுணையானார்கள்; அமர்க்களமாய் வாழ்ந்தும் வருகிறார்கள்.