’சூரரைப் போற்று’ படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக உருவான சர்ச்சைக்குப் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் வெளியாகாமல் உள்ளது.
'சூரரைப் போற்று' படத்தின் தணிக்கைப் பணிகள் முடிந்துவிட்டது. ஆனால் அதன் விவரங்கள் வெளியாகாமல் இருந்தது. இன்று (ஆகஸ்ட் 11) அதன் விவரங்கள் வெளியானது. 153:04 நிமிடங்கள் ஓடிக்கூடிய படத்தில் எந்த இடத்தில் எல்லாம் வசனங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்களும் வெளியானது.
பலரும் இதனைப் பகிர்ந்து, 'சூரரைப் போற்று' ஓடிடி தளத்தில் வெளியாகிறதா என்று ட்வீட் செய்யத் தொடங்கினார்கள். உடனடியாக ஓடிடி வெளியீடு குறித்த தகவல் பரவத் தொடங்கியது. இது தொடர்பாக படக்குழுவினர் தரப்பில் விசாரித்த போது, "கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் 'சூரரைப் போற்று' வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்படும். கண்டிப்பாக நேரடி ஓடிடி வெளியீடு சாத்தியமில்லை" என்று தெரிவித்தார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒரே சமயத்தில் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. மேலும், இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை இப்போதே தொடங்கப்பட்டு இருப்பது நினைவு கூரத்தக்கது.