பசுமை இந்தியா சவாலில், மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரம் நட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார் விஜய்
ஆகஸ்ட் 9-ம் தேதி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் #GreenIndiaChallenge என்ற சவாலில் பங்கேற்றார் மகேஷ் பாபு. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும்.
பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றை நட்ட வீடியோவை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு ""எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி கிடையாது. நான் #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்தச் சங்கிலி, எல்லைகளைக் கடந்து தொடரட்டும்" என்று தெரிவித்தார் மகேஷ் பாபு.
மகேஷ் பாபுவின் இந்தச் சவாலை விஜய் ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு உண்டானது. இன்று (ஆகஸ்ட் 11) மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றை நட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் விஜய். அதோடு "இது உங்களுக்காக மகேஷ்பாபு அவர்களே. பசுமையான இந்தியாவும், நல் ஆரோக்கியமும் கிடைக்க என் வாழ்த்துகள். நன்றி. பாதுகாப்பாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார் விஜய்
விஜய் தனது சவாலை ஏற்றுக் கொண்டதற்காக மகேஷ் பாபு "இதை ஏற்றுக்கொண்டு செய்து காட்டியதற்கு நன்றி சகோதரா. பாதுகாப்பாக இருங்கள்." என்று தெரிவித்துள்ளார். இந்த கரோனா ஊரடங்கில் விஜய் எங்குமே வெளிவருவதில்லை. இதனால் அவருடைய புகைப்படம் எதுவுமே வெளியாகவில்லை. இந்தச் சவாலின் மூலம் விஜய்யின் புகைப்படம் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்தச் சவாலை அடுத்த மூவருக்கு எடுத்துச் செல்ல விஜய் யாரையும் பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.