'இருமுகன்' திரைப்படத்தின் ரீமேக் உரிமையை யாருக்கும் விற்கவில்லை என அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
விக்ரம் நாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இருமுகன்'. ஷிபு தமீன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் நல்ல வசூல் பெற்று வெற்றியடைந்தது. ஸ்பீட் என்கிற போதை மருந்தை உட்கொள்பவர்களுக்கு 5 நிமிடம் அசாத்தியமான சக்தி கிடைக்கும். இந்த மருந்தை வில்லன் தீவிரவாதிகளுக்கு விற்க, அதை நாயகன் எப்படி தடுக்கிறார் என்பதே இந்தப் படத்தின் கரு.
இதுவரை இந்தப் படம் வேறெந்த மொழியிலும் ரீமேக் செய்யப்படவில்லை. ஆனால் சமீபத்தில் 'ப்ராஜக்ட் பவர்' (Project Power) என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் இந்தப் படம் வெளியாக உள்ளது. பவர் என்கிற போதை மருந்தை உட்கொண்டு 5 நிமிடத்துக்கு அசாத்திய சக்தி பெறுபவர்களைப் பற்றிய கதை இது என்பது ட்ரெய்லரில் தெளிவாகிறது.
ஆனால், ஒரு முக்கியமான வித்தியாசமாக, மருந்தை உட்கொள்பவர்களுக்கு ஏற்ப, அவர்களுக்குக் கிடைக்கும் சக்தியின் தன்மையும் மாறுகிறது. மேலும் இந்த மருந்து ஒரு குறிப்பிட்ட இளம் பெண்ணின் உடலிலிருந்து உருவாக்கப்படுகிறது. அந்தப் பெண்ணின் தந்தை அவளை மீட்பதே படத்தின் கதை எனத் தெரிகிறது.
இப்படி ஒரு வித்தியாசம் இருந்தாலும், போதை மருந்து, ஐந்து நிமிடத்துக்கு சக்தி என்ற விஷயத்தை வைத்து, 'இருமுகன்' படத்தின் ரீமேக்கா இது? அல்லது காப்பியடிக்கப்பட்டுள்ளதா என்ற சிலர் சமூக ஊடகங்களில் விவாதித்து வந்தனர்.
இதைக் கவனித்திருக்கும் ஷிபு தமீன்ஸின் தயாரிப்பு நிறுவனம், தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சீயான் விக்ரம் நடித்து ஷிபு தமீன்ஸ் தயாரித்து, ஆனந்த் ஷங்கர் இயக்கிய 'இருமுகன்' படத்தின் மாநில மொழி, சர்வதேச ரீமேக் என எந்த உரிமையையும் நாங்கள் விற்கவில்லை. இந்தத் தகவல், சமூக ஊடகத்தில் நிலவும் குழப்பத்தையும், நெட்ஃபிளிக்ஸின் 'ப்ராஜக்ட் பவர்' உடனான ஒப்பீட்டையும் நிறுத்தும் என்று நம்புகிறோம்" என்று பகிர்ந்துள்ளது.
இரு படங்களுக்கு இருக்கும் ஒற்றுமை அந்த போதை மருந்தைப் பற்றியது மட்டும்தானா, இன்னும் வேறு ஏதாவது இருக்கிறதா என்பது 'ப்ராஜக்ட் பவர்' வெளியான பிறகே தெரியவரும்.